இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

இடஒதுக்கீட்டு கொள்கையில் ஜே.பி.நட்டாவின் கருத்து ஆச்சரியமாக இருந்தாலும் வரவேற்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • Share this:
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் உறுதியாக இருக்கிறது. சமூகநீதியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு பிரிக்க முடியாதது” என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் திரு. ஜே.பி. நட்டா அவர்கள் அறிவித்திருப்பது, ஆச்சரியம் அளித்தாலும், மிகவும் மகிழ்ச்சி தருகிறது.


மேலும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், மத்திய உணவு அமைச்சருமான மாண்புமிகு ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள், சமூகநீதிக் கொள்கையின்பால் தொடர்ந்து காட்டிவரும் ஈடுபாட்டின் காரணமாக, “இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்” என்றும்; “இடஒதுக்கீடு அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை” என்றும் ஆணித்தரமாக அறிவித்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம், தனது தோழமைக் கட்சிகளுடன் இணைந்து எழுப்பிய சமூகநீதி இலட்சிய முழக்கம், தேசிய அளவில் எதிரொலித்திருப்பது, இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிலைநாட்டிடும் போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் முதற்கட்ட வெற்றி ஆகும்.

மத்திய அரசுக்கு - அகில இந்தியத் தொகுப்புக்கு, மாநிலங்கள் அளிக்கும் 15 சதவீத இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) இடங்களிலும், 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களிலும், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி - மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு (OBCs), கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும்; தமிழக மாணவர்களுக்கு மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடுபிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.இதுதொடர்பாக ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்திருக்கிறார்கள்; மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடத்தில் கோரிக்கை மனுவாகவும், நேரிலும் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டிருக்கிறது.

ஆனாலும் மத்திய பா.ஜ.க. அரசு, நியாயமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல் அமைதி காத்ததின் விளைவாக - சமூக அநீதி இனியும் தொடர்ந்திடக் கூடாது என்ற நோக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் “இடஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல” என்ற எதிர்பாராத, அதிர்ச்சி தரும் கருத்து ஒன்றினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எடுத்து வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தினை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஆனால் அவ்வழக்கின் உத்தரவில் நீதிபதிகள் அவ்வாறு கூறிய கருத்து இடம்பெறவில்லை. மாணவர்களின் நலன் கருதி, மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று, கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றாலும்; தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு குறித்த வழக்குகள் வரும் போதெல்லாம், “இடஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல” என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டு வருவதும் - அதை மத்திய பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

சமூகநீதியின் அடிப்படைக் கூறான இடஒதுக்கீடு குறித்த பிரிவுகள், இந்திய அரசியல் சட்டத்தில், “அடிப்படை உரிமைகள்” என்ற தலைப்பின் மூன்றாவது பகுதியில்இடம்பெற்றிருக்கிறது. அரசியல் சட்டத்தின் முகவுரையில் “சமூகநீதி” (Social Justice) என்பது பொறிக்கப்பட்டுள்ள நிலையில் - இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் கருத்துக்களை உச்சநீதிமன்றத்தில் எந்தவித அய்யப்பாட்டுக்கும் இடமின்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் உச்சநீதிமன்றத்தில்- நாட்டின் மிக முக்கியமான அரங்கத்தில்- அமைதி காத்து விட்டு, இப்போது “சமூகநீதிக் கொள்கை மீதான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரிக்க முடியாது” என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் கூறியிருப்பது, சற்று வேறுபாடாகவும் வியப்பாகவும் இருந்தாலும் - நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும், எங்கே பா.ஜ.க.வின் சிந்தனைப் போக்கையும் செயல்பாட்டையும் உணர்ந்து கொண்டு எதிர்வினை ஆற்றிடத் தொடங்கி விடுவார்களோ என்ற ஆதங்கத்தின் விளைவாக- இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான இந்தக் கருத்தை காலதாமதமாகவாவது, பா.ஜ.க. தலைவர் திரு. நட்டா அவர்கள் இப்போது தெரிவித்திருப்பதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 12.5.1989-ல் கொண்டு வந்து நிறைவேற்றிய சிறப்புத் தீர்மானத்தின் முக்கியமான பகுதியை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.

அந்தத் தீர்மானத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆம் விதியில் கூறப்பட்டுள்ளவாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4) 16(4) பிரிவுகளின் கீழ் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டினையும், சிறப்பு விதிகளையும் சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவினர் முன்னேறத்திற்காகச் செயல்படுத்துவதில் மத்திய அரசு பெரும்பங்கு வகிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அன்றைய மத்திய அரசுக்கு நினைவூட்டிய இந்த வரிகள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அப்படியே நிச்சயமாகப் பொருந்தும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆகவே, இடஒதுக்கீடு என்பது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்பதை மத்திய பா.ஜ.க. அரசு இப்போதாவது உணர வேண்டும்; உணர்ந்து, உண்மையான அணுகுமுறைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியால், ‘சமூகநீதிக் காவலர்’ மறைந்த பிரதமர் வி.பி.சிங் அவர்களின் ஆணையால், ‘மண்டல் கமிஷன்’ பரிந்துரைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு - இந்திய வரலாற்றில் முதல்முறையாக, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு அகில இந்திய அளவில், 27 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. “இந்த இடஒதுக்கீடு செல்லும்” என்று மண்டல் கமிஷன் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில், 69 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு - குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று - அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் இணைக்கப் பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கைகளைப் பின்பற்றியே, மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் விதிமுறைகள் (Regulations) தெளிவாகக் கூறுகிறது.

இந்த அடிப்படையில் - ஏற்கனவே இருக்கின்ற இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடங்களை வழங்கிட வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கை!

ஆனால், சமூகநீதியைத் தரம் தாழ்த்திடும் விதத்தில் – கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் பொருட்டு, ‘நீட்’ தேர்வை அவசரகதியில் திணித்தது மட்டுமின்றி, கடந்த மூன்றாண்டுகளாக மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களிலும், 15 சதவீத இளநிலைப் படிப்பிற்கான (எம்.பி.பி.எஸ்) இடங்களிலும், சமூகநீதியை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்துள்ள 9,550 முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 371 இடங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இது அப்பட்டமான சமூக அநீதி மட்டுமல்ல; அரசியல் சட்டம் அங்கீகாரம் செய்து - உச்சநீதிமன்றமே உறுதி செய்த சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது.

ஆகவே, திரு. நட்டா அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு, “பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பா.ஜ.க.,வும் உறுதியாக இருப்பது” உண்மையெனில், இப்போதுகூட காலம் கடந்து விடவில்லை; நடந்து முடிந்துள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையை ரத்து செய்து விட்டு - பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள - அரசியல் சட்ட ரீதியான சமூகநீதியை நிலைநாட்டிட- மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் மற்றும் இளநிலைப் (எம்.பி.பி.எஸ்) படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு ஆணையிடுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. நட்டா அவர்கள் வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்; மத்திய அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களும் அதற்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இனி எப்போதும் எதிர்காலத்திலும் குறையேதுமின்றிப் பயனளித்திடும் வண்ணம், அனைத்து இடஒதுக்கீடுகளையும், இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், திரு. நட்டா அவர்களையும், மத்திய பா.ஜ.க. அரசையும், நம்பிக்கையுடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்“ என்றுள்ளார்.

First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading