திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் தொகுதிகள் கூட மோசமான நிலையில் உள்ளதாகவும் சாடினார்.

 • Share this:
  திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன், முதல் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில், திமுக தலைவர் பரப்புரையை தொடங்கி இருக்கிறார். முதல் கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

  திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தொகுதி மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை ஒரு பெட்டியில் போட்டு ஸ்டாலினே சீல் வைத்தார்.

  தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் தொகுதிகள் கூட மோசமான நிலையில் உள்ளதாகவும் சாடினார். அடுத்த திமுக அரசு தான் வரப்போகிறது என்ற நம்பிக்கையில், பொதுமக்கள் மனுக்களை வழங்கி இருப்பதாகவும், அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றியே தீருவேன் என்றும் ஸ்டாலின் சூளுரைத்தார். மனுக்களை போட்டு வைத்திருக்கும் பெட்டியின் சாவி தன்னிடமே இருப்பதாகவும், திமுக வெற்றி பெற்று பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் பெட்டியை திறப்பேன் என்றும் ஸ்டாலின் கூறினார்.
  Published by:Vijay R
  First published: