நந்திகிராம் தேர்தல் அதிகாரியின் உயிருக்கு அச்சுறுத்தல்: மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

நந்திகிராம் தொகுதியின் தேர்தல் அதிகாரி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

 • Share this:
  நந்திகிராம் தொகுதியின் தேர்தல் அதிகாரி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

  மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  217  இடங்களை கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 47.9 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது. பாஜக 77 இடங்களை கைப்பற்றியுள்ளது.

  இந்த தேர்தல் வெற்றியையடுத்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இத்தகைய மாபெரும் வெற்றியை திரிணாமூல் காங்கிரஸ் பெற்றிருந்தாலும் முதலமைச்சர் வேட்பாளரான மம்தா பானர்ஜி தான் பேட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்.

  தொடக்க முதலே மம்தா பானர்ஜி மற்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரி ஆகியோர் மாறிமாறி முன்னிலை பெற்றுவந்தனர். ஒருகட்டத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக தகவல் வெளியானது. பின்னர், சுவேந்து அதிகாரி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. எனினும் இதனை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றத்தை  நாட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

  இந்நிலையில், நந்திகிராம் விவகாரம் தொடர்பாக இன்று பேசிய மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அந்த தொகுதி தேர்தல் அதிகாரி யாருக்கோ கடிதம் எழுதியதாக தனக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.

  ‘வாக்கு எண்ணிக்கையின்போது 4 மணிநேரம் சேவை பாதிக்கப்பட்டது. ஆளுநரே எனக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், திடீரென அனைத்தும் மாறிவிட்டது’ என்று குறிப்பிட்ட மம்தா, கட்சியினர் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் தற்போது கொரோனாவுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் மம்தா தெரிவித்தார்.

  மேலும், 2, 3 மாநிலங்களுக்கு மட்டுமே அதிகப்படியான மருந்துகள் மற்றும் ஆக்சிஜன்களை மத்திய அரசு வழங்குவதாகவும், அனைவருக்கும் சமமாக மருந்து கிடைக்க மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: