சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிவிட்டார் மம்தா- அமித்ஷா குற்றச்சாட்டு

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிவிட்டார் மம்தா- அமித்ஷா குற்றச்சாட்டு

அமித்ஷா

மேற்கு வங்கத்தில், சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மம்தா பானர்ஜி தவறி விட்டார். அனைத்து துறைகளிலும் அவரது அரசு தோல்வி அடைந்துவிட்டது.

 • Share this:
  2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்ற, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மம்தா பானர்ஜி தவறி விட்டார் என்றும், அனைத்து துறைகளிலும் அவரது அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

  மேற்கு வங்க மாநிலம், போல்பூரில் அமித்ஷா பிரமாண்ட வாகன பேரணி நடத்தினார். திறந்தநிலை வாகனத்தில் அவர் ஊர்வலமாக சென்றார். அதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, ‘மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வாகன அணிவகுப்பு மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. அவரது பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமது அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் மத்திய அரசு இதை செய்துள்ளது. இதில் யாரக்கேனும் சந்தேகம் இருந்தால், விதிமுறை புத்தகத்தை படித்து பார்க்கட்டும் என்றார்.

  மேற்கு வங்கத்தில், சட்டம்-ஒழுங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மம்தா பானர்ஜி தவறி விட்டார். அனைத்து துறைகளிலும் அவரது அரசு தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே ‘வந்தேறி’ பிரச்சினையை கிளப்புகிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும், வங்காளதேசத்தினர் ஊடுருவலை மம்தா அரசால் தடுக்க முடியாது என்று கூறிய அமித்ஷா, பாஜகவால்தான் அதனைச் செய்ய முடியும் என்றார்.

  விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறும் மம்தா, விவசாயிகளுக்கான மத்திய அரசு திட்டங்களை தடுக்கிறார், இதுவா கூட்டாட்சி முறை? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கியவுடன், இதுகுறித்து விவாதிப்போம் எனவும் கூறினார்.
  Published by:Suresh V
  First published: