பாஜகவுடன் கைகோர்த்த அஜித் பவார் பக்கம் எத்தனை எம்.எல்.ஏ.க்கள்...?

Maharashtra Politics News and Update |

பாஜகவுடன் கைகோர்த்த அஜித் பவார் பக்கம் எத்தனை எம்.எல்.ஏ.க்கள்...?
சரத் பவார் | உத்தவ் தாக்கரே | தேவேந்திர பட்நாவிஸ்
  • News18
  • Last Updated: November 23, 2019, 12:36 PM IST
  • Share this:
மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைய ஆதரவுக்கரம் நீட்டியுள்ள அஜித் பவார் பக்கம் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர் என்பதை பொறுத்தே அரசு நீடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனாவின் முதல்வர் பதவி கோரிக்கையால் பாஜக உடனான கூட்டணி முறிந்தது.

சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருந்தது.


இதற்கிடையே, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. எனினும், ஆட்சியமைப்பதில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

நேற்று, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமையும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறிய நிலையில், இன்று காலை திடீர் அரசியல் மாற்றம் நடந்தது.

அஜித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக உள்ள அஜித்பவார், திடீரென பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட, உடனே குடியரசுத்தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு, பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.

அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இந்த திடீர் அதிர்ச்சியை எதிர்பார்க்காத சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் அஜித் பவாரின் முடிவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.

தேசிய அளவில் இந்த அரசியல் மாற்றம் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, சிவசேனா தலைமையில் ஆட்சியமையும் என்று சரத்பவார் கூறிய நிலையில், இந்த திடீர் அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவாரின் இந்த முடிவால், கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அஜித்பவாரின் கட்சிப்பொறுப்பும், சட்டமன்ற குழுத்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 105 இடங்களை வைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 56 இடங்களையும், சிவசேனா 54 இடங்களையும் வைத்துள்ளது.

பாஜக உடன் திடீர் கூட்டணி வைத்த அஜித்பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை. 54 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்கடிதம் அளித்துள்ளதாக பாஜக கூறுகிறது.

வருகைப் பதிவுக்காக எம்.எல்.ஏ.க்களிடம் பெறப்பட்ட கையெழுத்தை, மோசடியாக பயன்படுத்தி, அஜித்பவார் பதவியேற்றுள்ளார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இன்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் சரத்பவாரின் தலைமையில் நடக்க உள்ளது. இதில், எத்தனை எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர் என்பதை பொறுத்தே அஜித்பவார் பக்கம் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

போதிய அளவு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாமல், அஜித் பவார் திடீரென இப்படி ஒரு முடிவெடுத்திருக்க வாய்ப்பு இல்லை. இதனால், கட்சியில் சரிபாதி எம்.எல்.ஏ.க்கள் அவர் பக்கம் நின்றாலும் பாஜக - அஜித்பவார் கூட்டணி ஆட்சி தப்ப வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை, எம்.எல்.ஏ.க்கள் சரத் பவார் பக்கம் நின்று விட்டால், பாஜக - அஜித்பவார் கூட்டணி ஆட்சி கவிழவும் வாய்ப்பு இருக்கிறது.


First published: November 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading