• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ஜோக்கர் படத்தின் சாட்சியாக வாழும் மதுரையின் குக்கிராமம் - ஓட்டு கேட்டு வராதீர்கள் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

ஜோக்கர் படத்தின் சாட்சியாக வாழும் மதுரையின் குக்கிராமம் - ஓட்டு கேட்டு வராதீர்கள் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

மதுரை

மதுரை

வீடு தோறும் கழிப்பறை திட்டத்தில் அனைத்து வீட்டிற்கும் மூன்று அடிக்கு வெறும் கற்களை மட்டும் அடுக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர். பல வீடுகளுக்கு அந்த மூன்றடி சுவர் கூட கிடையாது.

  • Share this:
ஜோக்கர் படத்தின் கதையை போல கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் தீவுப்போல காட்சி அளிக்கிறது மதுரை அருகேயுள்ள வரகனேரி கிராமம். அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்த்து சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து உள்ளனர் இக்கிராம மக்கள்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனைக்குளம் ஊராட்சியில் உள்ளது வரகனேரி கிராமம். 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், பல தொற்று நோய்களாலும், அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பலர் புலம் பெயர்ந்து சென்றுவிட்டனர். தற்போது, சுமார் 70 வாக்காளர்களை கொண்ட 25 குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

1990ம் ஆண்டு கால கட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் கிராமப்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தில் இங்குள்ள மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகள் தற்போது மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, சுவர்கள் விரிசலுற்று இடியும் நிலையில் உள்ளன. குடியிருக்க இயலாத வீடுகளில் வசித்து வரும் இந்த மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் சொல்லி மாளாதவை.

வீடு தோறும் கழிப்பறை திட்டத்தில் அனைத்து வீட்டிற்கும் மூன்று அடிக்கு வெறும் கற்களை மட்டும் அடுக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர். பல வீடுகளுக்கு அந்த மூன்றடி சுவர் கூட கிடையாது. இங்குள்ள கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் அனைவரும் இயற்கை உபாதையை திறந்த வெளிகளில் தான் கழித்து வருகின்றனர்.

வரகனேரி கிராம மக்கள்


உப்புக் கரிக்கும் தண்ணீர், பயணிக்க இயலாத சாலை என இன்னும் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வந்த மக்கள், இப்போது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

இது குறித்து கண்கலங்க நம்மிடம் பேசினார் புஷ்பம் என்ற மூதாட்டி.
"இருபது வருடங்களாக நல்ல தண்ணீர் கிடையாது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. மாதம் ஒருமுறை பாம்பு கடித்து யாராவது மருத்துவமனைக்குச் செல்கிறோம். வாக்கு கேட்டு வருபவர்கள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றதும், எங்கள் ஊரை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. வீடு கட்டித் தருவதாக கூறி எங்களை நிறுத்தி போட்டோ எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதற்கான பணத்தை எங்களுக்கு தருவதில்லை. ஊரை பார்த்துவிட்டு யாரும் பெண் கொடுப்பதில்லை, பெண் எடுப்பதில்லை. கற்களை மட்டுமே மூன்றடிக்கு அடுக்கி வைத்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக கழிப்பறை கட்டித்தரவில்லை" என்றார்.

கர்ப்பிணி பெண் சுகன்யா ஸ்ரீ கூறுகையில், "நான் ஆறு மாதம் கர்பமாக உள்ளேன். மருத்துவமனைக்குச் செல்வதற்கு 7 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. மருத்துவர்கள் அதிகமான தண்ணீர் குடிக்கச் சொல்கிறார்கள். ஆனால், எங்கள் ஊரில் நல்ல தண்ணீர் கிடையாது. கழிப்பறை வசதி இல்லாததால் கண்மாய் கரை, கருவேலங் காட்டு பகுதிகளில் இயற்கை உபாதையை கழிக்க செல்கிறோம். பாம்புகள், பூச்சிகள் கடித்துவிடும் நிலைமை இருக்கிறது. வசதியில்லாததால் சில கர்ப்பிணிகள் அவர்களுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நாங்கள் இரண்டு பேர் மட்டும் வேறு வழியில்லாமல் இருக்கிறோம். காலையில் எழுந்தால் உயிரோடு இருப்போமா என்கிற பயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

பட்டதாரி இளைஞர் சம்பத் பேசுகையில், "எங்க ஊருக்கு எந்த திட்டங்கள் வந்தாலும். அவை, எங்களுக்கு அது கிடைப்பதில்லை. அனைத்து பணிகளிலும் முறைகேடு நடக்கிறது. வெறும் போர்டு மட்டும் வைத்துவிட்டு இவ்வளவு செலவாகிவிட்டது கணக்கை மட்டும் காண்பிக்கிறார்கள். மக்கள் குறைதீர்ப்பு முகாமில் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பஞ்சாயத்து தலைவர், சட்டமன்ற உறுப்பினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தனித்தீவாக கூட வாழ்ந்து கொள்கிறோம்"
என நா தழுதழுக்க பேசியவர், "கர்ப்பிணி பெண்களுக்கு பால் வாங்க 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். இந்த ஊரில் எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை. ஊரை காலி செய்துவிட்டு செல்லவேண்டும் என்று தான் நாங்களும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். இனி எங்களிடம் ஓட்டு கேட்டு வருபவர்களிடம் ஒப்பந்த பத்திரத்தில் வசதிகளை செய்து தருவோம் என்ற கையெழுத்து பெற்று கொண்ட பின்னரே உள்ளே வர விடுவோம்" என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: