கொரோனாவில் இருந்து தமிழகத்தை விடுவியுங்கள்!: புதிய அரசுக்கு கிருஷ்ணசாமி வேண்டுகோள்

கிருஷ்ணசாமி

தமிழகத்தில் புதிதாக பதவியேற்கவுள்ள அரசு, கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்

 • Share this:
  தமிழகத்தில் புதிதாக பதவியேற்கவுள்ள அரசு, கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  அந்தவகையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து புதிய தமிழகம் கட்சிக்கு பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

  மே 02 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  கொரோனா பெருந்தொற்று சவாலாக உள்ள நேரத்தில்  ஸ்டாலின் பதவியேற்கவுள்ளதை  தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணசாமி,  ‘ திமுக பல்வேறு விதமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. பதவி ஏற்றவுடன் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கவும்; தமிழக மக்கள் மீதான பல்வேறு பொருளாதார, சமூக சுமைகளை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

  புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசின், தமிழக மக்களின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு புதிய தமிழகம் கட்சி திறந்த மனப்பான்மையுடன் துணைநிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  மேலும், தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து  மே 5ம் தேதி புதிய  தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

  நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் , ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி , டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: