அதிமுக-பாஜக கூட்டணி உள்ளதா என்பதை பாஜக தலைமை அறிவிக்கும்- குஷ்பு

அதிமுக-பாஜக கூட்டணி உள்ளதா என்பதை பாஜக தலைமை அறிவிக்கும்- குஷ்பு

குஷ்பு

பாஜக தலைமை தங்களுடைய முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்து அறிவிக்கும் என்றார் குஷ்பு.

 • Share this:
  அதிமுக-பாஜக கூட்டணி உள்ளதா என்பதை பாஜக தலைமை முதலில் அறிவிக்கட்டும் என்றும், அதன்பின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புகூறியுள்ளார்.

  சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், குஷ்பு கலந்துகொண்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு, முதல் கூட்டமே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், நாம் என்ன செய்ய போகிறோம் அதுமட்டுமே தற்போது முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி, பாஜக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் யாராக இருந்தாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் எனக் கூறினார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவராக இருந்த எனக்கு, தற்போது பொறுப்பாளர் பொறுப்பு அளித்துள்ளனர் என அனைவரும் கேள்வி கேட்டனர். ஆனால் தற்போதுதான் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பேசிய குஷ்பு, தேசிய அளவில் பொறுப்பில் இருந்தபோது, ஏசி ரூமில் உட்கார்ந்து எதிர்க்கட்சியை விமர்சிக்கும் வேலை மட்டும்தான் இருக்கும் என்றார்.

  அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது, பாஜக நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலுமே கூட, எதிர்கட்சி என்ற காரணத்தால் அதனை விமர்சித்தே ஆக வேண்டும். ஆனால் தற்போது மக்களை சந்தித்து பணியாற்றும் வாய்ப்பு கொடுத்த பாஜக மாநில தலைவருக்கு நன்றி.

  இந்நிலையில், குறுகிய காலம் மட்டுமே உள்ளது. இரவு பகலாக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், தான் ஒரு நடிகையாக இருந்துள்ளேன் என்பதை மறந்து உங்களில் ஒரு நிர்வாகியாக என்னை நீங்கள் பார்க்க வேண்டும் என்றும் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்தால் என்ன பயன் இருக்கிறது என்பது குறித்து மக்களிடம் நாம் எடுத்து செல்ல வேண்டும் என்று பேசினார்.

  அதுமட்டுமின்றி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 20 பூத்கள் இலக்கு வைத்து பணியாற்ற வேண்டும் என்றும், நம் நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, எந்த ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

  கூட்த்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, அதிமுகவுடன் கூட்டணி உள்ளதா என்பதை முதலில் பாஜக முடிவு செய்து அறிவிக்கட்டும் என்று கூறினார். மேலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். ஆனால் பாஜக தலைமை தங்களுடைய முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.

  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, அவர் நடிகராக இருக்கலாம், அவருக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி அப்பா, தாத்தா பெயரை வைத்து இந்த தொகுதியில் ஜெயித்து விட முடியும் என அவர் நினைத்து விட கூடாது என்று கூறினார்.

  மனு விவகாரத்தில் திருமாவளவனை எதிர்த்து பேசியதில் தனக்கு எந்த முன்விரோதமும் இல்லை என்று கூறிய குஷ்பு, திமுகவில் இருக்கும்போது, திருமாவளவனுக்கு ஆதரவாக, தான் பிரச்சாரம் செய்துள்ளேன் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தாமரை மலராது என்று நான் தான் சொன்னேன்; தற்போது நானே சொல்கிறேன் கட்டாயம் தாமரை மலர்ந்தே தீரும் என்றும், பாஜக எங்கெல்லாம் ஜெயிக்காது என்று சொன்னார்களோ அங்கெல்லாம் நாங்கள் ஜெயித்து உள்ளோம் என்று கூறினார். வரும் சட்டமன்ற தேர்தலில், தான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் எனவும் குஷ்பு கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: