கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார்.
கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பட்டதால் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த போட்டியிட்டுள்ளார்.
இதேபோல், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி வழங்கப்பட்டது. பாஜக சார்பில் கடந்த முறை வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறங்கினார். இருவருமே தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Must Read : Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தபால் வாக்குகள் நிலவரம்
கடந்த மாதம் 6 தேதி நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 68.80 சதவீத வாக்குகள் பதிவாகின.
கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. தற்போது விஜய் வசந்த் 1,48,077 வாக்குகள் பெற்றுள்ளார். பொன். ராதாகிருஷ்ணன் 95,706 வாக்குகள் மட்டுமே பெற்று 52,371 வாக்குகள் பின் தங்கியுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் 9-வது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இதற்கு முன்பு எட்டு முறை போட்டியிட்ட அவர் இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.