அடிமட்ட மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் - கமலுக்கு பேரூர் ஆதீனம் அறிவுரை

அடிமட்ட மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் - கமலுக்கு பேரூர் ஆதீனம் அறிவுரை

கமல்ஹாசன்

பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேரூராதீனம் மற்றும் கௌமார மட ஆதீனம் உள்ளிட்ட முக்கிய ஆதீனங்களுக்கு சென்று ஆதரவு கேட்டு வந்தார்.

  • Share this:
கோவை பேரூர் ஆதீனத்திற்கு சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனிடம், அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் இன்னும் கொஞ்சம் மறுமலர்ச்சியை  எதிர்பார்க்கலாம் என பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அறிவுரை வழங்கினார்.

கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கோவையில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் மற்றும் மத தலைவர்களைை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். ஏற்கனவே கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆதரவு கேட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை கோவையில் உள்ள மிக பழைமையான பேரூர் ஆதீனம் மடத்திற்கு சென்றார். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளாரை நேரில் சந்தித்த கமல்ஹாசன், சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கேட்டதுடன், சிறிது நேரம் பேரூராதீனத்துடன் கலந்துரையாடினார். பேரூரதீனத்தை சந்திக்க வந்தபோது  கமல்ஹாசன்  ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடந்து வந்தார்.

அப்போது கமலின் உடல் நிலை குறித்து விசாரித்த பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கொள்கைகள் குறித்தும், அதில் தன்னை கவர்ந்தவை குறித்தும் பேசினார். அப்போது செயல்பாடுகள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர்,  அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் இன்னும் கொஞ்சம் மறுமலர்ச்சியை  எதிர்பார்க்கலாம் என கமலஹாசனுக்கு பேரூராதீனம் அறிவுரை வழங்கினார்.

வழக்கமாக மடத்திற்கு தன்னை சந்திக்க வரும் நபர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுப்பது பேரூராதீனத்தின் வழக்கம். ஆனால் கமல்ஹாசன் நாத்திகவாதி என்பதால் அவருக்கு விபூதி கொடுப்பதை தவிர்த்த பேரூராதீனம், ஆதீனம் தொடர்பான புத்தகங்களை கமலஹாசனுக்கு நினைவு பரிசாக வழங்கினார். பேரூர் ஆதீன மடம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும் அங்கு செல்லும் போது அங்கு போட்டியிடும் வேட்பாளர் ஷாஜகானை அழைத்து செல்லவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் மட்டும் சென்று பேரூராதீனத்தை சந்தித்து ஆதரவு கேட்ட பின் பிரச்சாரத்திற்கு கமலஹாசன் கிளம்பினார்.

பேரூர் ஆதீனத்திற்கு வந்த கமலுடன் அங்கிருந்த பொதுமக்களும் மடத்தைச் சேர்ந்த ஊழியர்களும் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுடன் இணைந்து கமல்ஹாசன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேரூராதீனம் மற்றும் கௌமார மட ஆதீனம் உள்ளிட்ட முக்கிய ஆதீனங்களுக்கு சென்று ஆதரவு கேட்டு வந்தார். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து கமல்ஹாசனும் கோவையில் உள்ள ஆதீனங்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: