மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க அரசுக்கும் அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பா.ஜ.க எப்படியாவது இந்த முறை அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தங்களது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றை தொடக்கி வைத்து உரையாற்றினார். அதில் பேசிய அவர், ``மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியை நோக்கிய மாதிரிக்கும் மம்தா பானர்ஜியின் அழிவை நோக்கிய மாதிரிக்கும் இடையிலான போட்டியாக இருக்கும். சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-விற்கான மிகப்பெரிய பரிசாக மேற்கு வங்காளம் இருக்கும்” என்று கூறினார். மேலும், மேற்கு வங்கத்த்கில் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 200 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
`ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம் தொடர்பாக பேசிய அமித் ஷா, ``ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தைக் கேட்டால் மம்தா பானர்ஜி கோபமடைகிறார். மேற்கு வங்காளத்தில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிடுவது குற்றமாகிவிடும் என்பது போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை இந்தியாவில் எழுப்பாமல், பாகிஸ்தானிலா எழுப்ப முடியும்? சட்டமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிடுவார். குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை எதிர்நோக்கி காத்திருப்பதால் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை அவமானமாக கருதுகிறார்” என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, BJP, Mamata banerjee