மம்தாவை வீழ்த்த களமிறக்கப்படுகிறாரா கங்குலி - பிரிகேட் மாநாட்டில் விடை கிடைக்குமா?

சவுரவ் கங்குலி.

கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரிகேட் பரேட் மைானத்தில் நடைபெறும் மாநாட்டில் கங்குலி கலந்துகொள்கிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

 • Share this:
  இந்தியக் கிரிக்கெட்டின் ‘தாதா’என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கங்குலியை மேற்கு வங்கத்தில் களமிறக்க பா.ஜ.க தரப்பு கடுமையாக முயற்சித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் வலுவாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டுமானால் மக்களுக்கு நன்கு பரிட்சையமான ஒரு நபரை அரசியல் களத்தில் இறக்கினால் மட்டுமே வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என பா.ஜ.க கருதுகிறது. இதன்காரணமாக சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்களை களத்தில் இறக்க பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது. மேற்குவங்கத்தில் இம்முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பது பா.ஜ.கவின் திட்டமாக உள்ளது.

  கங்குலி பிரபலமான கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி கொல்கத்தா மண்ணின் மைந்தன் என்பதால் அவரை வைத்து காய் நகர்த்த பா.ஜ.க திட்டமிடுகிறது. கங்குலி தற்போது பிசிசிஐயின் தலைவராக இருக்கிறார். பிசிசிஐ-யின் மொத்த கட்டுப்பாடும் அதன் செயலராக இருக்கும் அமித் ஷா மகன் ஜெய் ஷா-வின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஜெய் ஷா மூலம் கங்குலிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து பா.ஜ.க தரப்பு மீண்டும் கங்குலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

  மார்ச் 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார். இதில் கங்குலியை எப்படியாவது பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திலிப் கோஷ், “கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் மார்ச் 7-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கங்குலி இதில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. கங்குலி விரும்பினால் பங்கேற்கலாம் நாங்கள் அவரை வரவேற்போம். பொதுக்கூட்டத்தில் கங்குலி கலந்துக்கொண்டால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். மக்களும் மகிழ்ச்சியடைவார்கள். இதில் கங்குலிதான் முடிவு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கங்குலி பா.ஜ.கவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியானது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த கங்குலி தான் எந்தக்கட்சியில் இணையப்போவதில்லை என்று கூறினார். மார்ச் 7-ம் தேதி பிரிகேட் பரேட் பொதுக்கூட்டத்தில் கங்குலி பங்கேற்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் கங்குலி தரப்பில் இருந்து எந்த மறுப்பும் இல்லை. தற்போது பாஜகவில் இணைகிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கங்குலி பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். எனவே கங்குலியின் அரசியல் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் பிரிகேட் மாநாடு வரை கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் ஆக வேண்டும்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: