தேர்தல் பணப்பட்டுவாடா : தமிழகத்தில் பிடியை இறுக்கும் ஐ.டி - தவிக்கும் வேட்பாளர்கள்

தேர்தல் பணப்பட்டுவாடா : தமிழகத்தில் பிடியை இறுக்கும் ஐ.டி - தவிக்கும் வேட்பாளர்கள்

வருமான வரித்துறையினர் சோதனை

திருவண்ணாமலையில் தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தற்போது வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.

 • Share this:
  தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்டும் நேரத்தில் கட்சிகளுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஐ.டி ரெய்டு. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தவிர்ப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது அமலாக்கத்துறை. தாராபுரத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரின் வீடு அலுவலகங்கள் மார்ச் 18-ம் தேதி வரிமானவரித்துறை சோதனை மேற்கொண்டது. அதேநாளில்  தி.மு.க நகரச் செயலாளர் கே.எஸ். தனசேகரன், அதேபோல் சந்திரசேகரின் சகோதரரும் ம.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளரும்  தொழிலதிபருமான கவின் நாகராஜ் வீடுகளில் சோதனை நடந்தது. மாலை 4 மணியளவில் தொடங்கிய சோதனைகள் இரவு 11 மணி அளவில்தான் நிறைவு பெற்றது.

  சந்திரசேகருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்தில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வந்தது. அதேபோல் கணக்கில் காட்டப்படாத 10 கோடி ரூபாய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  கடலூரில் அ.தி.மு.க அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 'பணம் மற்றும் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை' என்று அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். திருவண்ணாமலையில் தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தற்போது வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.

  திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அத்தொகுதி தி.மு.க வேட்பாளர் ஏ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. இதற்கிடையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன், கரூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திலும் இந்த சோதனை விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  கடந்த சில தினங்களுக்கு ஐ.டி ரெய்டு நடந்த தாராபுரம் ஆகட்டும் தற்போது ஐடி ரெய்டு நடக்கும் திருவண்ணாமலை ஆகட்டும். இரண்டு இடங்களிலும் பா.ஜ.க, தி.மு.க நேரடியாக போட்டியிடும் தொகுதிகளாகும். தாராபுரத்தில் பா.ஜ.க தமிழக தலைவர் எல். முருகன் வேட்பாளராக களமிறங்குகிறார். அதேபோல் திருவண்ணாமலையில் தி.மு.க வேட்பாளர் எ.வ. வேலுவை எதிர்த்து பா.ஜ.க தரப்பில் எஸ்.தங்கவேல் களமிறங்குகிறார். தேர்தலுக்கு மிக்குறைந்த நாள்களே உள்ள நிலையில் நிர்வாகிகள் மட்டும் வேட்பாளர்கள் வீடுகளில் நடக்கும் வருமானவரி சோதனைகள் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Ramprasath H
  First published: