வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியைத் தேர்ந்தெடுத்தேன் - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியைத் தேர்ந்தெடுத்தேன் - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பமனு வழங்கியது ஏன் என்று தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களையும் அந்தந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளரும் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ள செய்தி அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், `சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி செயளாலர்கள், மாவட்ட செயலாளர் இந்த தொகுதியில் நான் போட்டியிட விருப்பத்தை தெரிவித்தனர். எளிதில் நிச்சியமாக வெற்றி பெறலாம் என தெரிவித்தனர். அதனால்தான், இந்தத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன். இந்தத் தொகுதியில் என்னுடைய பிரசாரத்தைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு உள்ளது. என்னுடைய வெற்றியை மக்கள் முடிவு செய்வார்கள்” என்று பேசினார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி ஸ்டார் தொகுதியாக இருப்பது குறித்தும் பா.ஜ.க சார்பாக குஷ்பு போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ’எனக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுத்த பின்பு அதை பற்றி பேசுவோம்’ என்றார். தமிழகத்தில் வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ’நான் 25 நாள் பிரச்சாரம் செய்தேன். தமிழகம் முழுவதும் சிறந்த எழுச்சி உள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர். திமுக ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.

`தாத்தா சொத்து பேரனுக்கு என்பார்கள். தாத்தா தொகுதி உங்களுக்கு கூடுதல் பலமா?’ என்ற கேள்விக்கு ``தாத்தா சொத்து அப்படி எல்லாம் கிடையாது. இது அரசியல். மக்களை சந்திக்கனும், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாத்தாவை ஏற்றுகொண்டதால் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கிடையாது. அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம். ஒரே கலைஞர் அவர் தான். படிப்படியாக நான் வளர்ந்து வருகிறேன். தற்போது ஒரு வாய்ப்பு கேட்டுள்ளேன். அதை தலைவர், பொதுச்செயலாளர் பார்த்து முடிவு செய்வார்கள்” என்று பதிலளித்தார்.

வாரிசு அரசியல் பற்றி கருத்து கேட்டதற்கு, ’நாடாளுமன்றத் தேர்தல் அப்போது நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். அப்போது விமர்சகங்கள் எழுந்தது. அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய பணி தலைவர் கொடுப்பது. அ.தி.மு.க ஆட்சியின் மோசடி, ஊழல்களை மக்களிடம் எடுத்து சென்று வருகிறோம்” என தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: