மேற்கு வங்கம் : பா.ஜ.க ஆதரவாளரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள்?

பா.ஜ.க ஆதரவாளர்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக வெளியான தகவல் மேற்கு வங்காள அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி திரிணாமுல் காங்கிரஸை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக வெளியான தகவல் மேற்கு வங்காள அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோபால் மஜூம்தார் மற்றும் அவரது அம்மா ஷோவா மஜூம்தார் ஆகியோரைதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷோவா, ``தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அவர்கள் எங்களை கடுமையாக தாக்கினர். என்னுடைய முகத்திலும் குத்தினர். நான் மிகவும் பயந்தேன். தாக்குதலைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் எங்களிடம் கூறினர். என்னுடைய உடல் முழுவதும் வேதனையில் உள்ளது” என்று பெங்காலி மொழியில் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலும் ஷோவா பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் கேப்ஷனில், ``மம்தா திதி, இந்த வயதான பெண்ணின் வேதனைக்கும் கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த கோபால் மஜூம்தாரின் வீட்டிற்குள் புகுந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று நபர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் பாஜகவுக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``திரிணாமுல் காங்கிரஸ் பாசிட்டாவான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க அப்படி இல்லை. மம்தா பானர்ஜியின் நல்லாட்சியில் அவர்களுக்கு தெரிவிக்க எந்தவித எதிர்ப்பும் இல்லை. எனவே, அவர்கள் இவ்வளவு தாழ்வாக செயல்படுகிறார்கள். இது முற்றிலும் போலியானது. ஃபேக் நியூஸ் தொழிற்சாலையாக செயல்படுவது மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: