மூத்த குடிமகன்களுக்கு தபால் வாக்கு: எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், தவறான யூகத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

 • Share this:
  மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்த திமுக வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

  மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

  திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிப்பது, தேர்தலில் ரகசியத்தை பாதிக்கும் என வாதிட்டார்.

  அரசியல் சாசனத்தின்படி, தேர்தல் வாக்களிப்பில் அனைவரையும் சமமாக கருத வேண்டும். எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது எனத் தெரிவித்த அவர், மாற்றுத் திறனாளிகள் குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவும், வாக்காளர் யார் என்பதை வாக்குச்சாவடிக்கு செல்லும் போது தான் அடையாளம் காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.

  மூதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனவும் அவர் வாதிட்டார்.

  தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், தவறான யூகத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தற்போது வழங்க உள்ள தபால் வாக்கு என்பது விருப்ப தேர்வு தான் என்றும் கூறினார்.

  மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், இதுசம்பந்தமாக மத்திய அரசுடன் கலந்தாலோசித்தாலே போதுமானது எனவும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க அவசியமில்லை எனவும் வாதிட்டார்.

  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

  இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தபால் வாக்கு செலுத்த அனுமதி அளித்து சட்டப்பிரிவுகளை எதிர்த்த வழக்கில் தகுதி இல்லை என கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
  Published by:Vijay R
  First published: