EXCLUSIVE: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது; எந்த சந்தேகமும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

EXCLUSIVE: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது; எந்த சந்தேகமும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

சசிகலா நலம் பெற்று விரைவில் திரும்பி வர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாகவும், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து எமது செய்தியாளர் பூர்ணிமா நடத்திய நேர்காணல் விவரம்:

  திமுக நடத்திய கிராம சபை கூட்டங்கள் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

  தமிழகம் முழுவதும் 10,600 கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். வழக்கமாக, பெண்கள் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறைவு. ஆனால் நாங்கள் நடத்திய கிராம சபை கூட்டங்களில் அவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். கூட்டத்தில் அமர்ந்து, கேள்விகளைக் கேட்டனர். என்னுடைய பதில்களைக் பொறுமையாகக் கேட்டார்கள். இது மிகப்பெரிய மாற்றம்.

  சட்டமன்ற தேர்தல்களை பாதிக்கும் பிரச்னைகள் எவை?

  ஏற்கனவே, கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் கடினமான காலங்களை கடந்து வருந்திருக்கின்றனர். ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கின்றது. விலைவாசி, பணவீக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றது. இந்த விலை உயர்வை, மத்திய அரசும், மாநில அரசும் கட்டுப்படுத்த முன்வரவில்லை. குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு தயாராக இல்லை. தமிழக அரசு, மத்திய அரசிடம் அடிபணிந்து செல்லும் நிலையில்தான் இருக்கின்றது. மேலும், மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கின்றது. தலைவர் கலைஞர் பிறந்த ஊரான திருகுவளையில், பயிர் சேதத்தால் ஏற்பட்ட மன வேதனையால் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதான் மக்களின் இன்றைய நிலை. ஆகவே, ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றர்.

  வேளாண் சீர்திருத்த சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்க தயார் என மத்திய அரசு கூறியிருப்பதை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?

  இது கண்துடைப்பாகத்தான் நான் பார்க்கிறேன். இது அந்த சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான தந்திரம். விவசாயிகளுக்கு பல சலுகைகள் வழங்குவதாகக் கூறி விவசாயிகளை திசை திருப்புகின்றனர். அரசுடன் விவசாயிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலல் அந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படவில்லை. சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். அதுமட்டும் அல்ல, பாஜக அரசு மீது நம்பிக்கையும் இழந்துள்ளனர்.

  தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்வார்களா?

  ஒருபோதும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மதச்சார்பற்ற அரசைத்தான் மக்கள் விரும்புகின்றனர். இதில் தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். திருவள்ளுவர் பெயரை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதை பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் சேர்ந்து செய்து வருகின்றனர்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

  திமுகவும் காங்கிரசும் நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்ந்திருக்கிறோம், தற்போதும் தொடர்கிறது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

  காங்கிரஸ் தலைவர்கள் கமல்ஹாசன் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் நல்லது என்று சொல்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

  அது அவர்களின் கருத்து. அவர்களின் தனிப்பட்ட கருத்து குறித்து நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.

  சசிகலா விரைவில் விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அதன் அரசியல் தாக்கம் எப்படி இருக்கும்?

  சசிகலா பொறுத்தவரை  உட்கட்சி பிரச்னை. அதில் நான் தலையிடக்கூடாது. என்னைப் பொறுத்தவரையில் சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அது குறித்து தெளிவான விளக்கம் தேவை. அவர் நலம் பெற்று விரைவில் திரும்பி வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
  Published by:Suresh V
  First published: