Exclusive : லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன் : செல்லூர் ராஜுக்கு சின்னம்மா சவால்

செல்லூர் ராஜூ க்கு தான் நான் சவால். எனக்கு செல்லூர் ராஜு சவால் அல்ல. எனக்கு தகுதியான எதிரி அல்ல அவர் . 

  • Share this:
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடுகிறார் சின்னம்மா. 67 வயதாகும் இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும், முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறார்.நியூஸ் 18 க்கு அவர் பிரத்யேக பேட்டி  அளித்துள்ளார்.

செய்தியாளர் : முதல் முறையாக சட்டமன்ற தொகுதியில் களம் காண்கிறீர்கள் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

சின்னம்மா : தொகுதி முழுவதும் நான் அறிமுகம் ஆகி இருக்கிறேன். 50 ஆண்டுகாலம் இதே மக்களுடன் பழகி இருப்பதால் 80 சதவீத மக்களுக்கு என்னை நன்றாக தெரியும்.சிறியவர் முதல் பெரியவர் வரை என்னை பெயர் சொல்லி அழைக்கும் முறையில் நான் அறிமுகமாக உள்ளேன். எனவே எனக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

செய்தியாளர் :  40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருந்துள்ள நிலையில், போட்டியிடும் வாய்ப்பு தாமதமாக கிடைத்துள்ளதாக உணர்கிறீர்களா?

சின்னம்மா : வாய்ப்பு தாமதமாக கிடைத்துள்ளது உண்மை தான்.தாமதமாக கிடைத்திருந்தாலும் ஸ்டாலினின் தனி கவனம் மதுரை மேற்கு தொகுதியில் இருக்கிறது.லேட்டாக கொடுத்திருந்தாலும் உனக்கு லேட்டஸ்டாக கொடுத்து இருக்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்த்து நிற்கும் அமைச்சர் செல்லூர் ராஜூவை தெர்மாகோல் என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் வெற்றி கொண்டு வா என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் : அமைச்சர் செல்லூர் ராஜூ வை எதிர்த்து போட்டியிடுவது சவாலாக உள்ளதா?

சின்னம்மா : செல்லூர் ராஜூ க்கு தான் நான் சவால். எனக்கு செல்லூர் ராஜு சவால் அல்ல. எனக்கு தகுதியான எதிரி அல்ல அவர் .  1996 லேயே மாமன்ற உறுப்பினராக இருந்த போதே செல்லூர்  ராஜுவை எதிர்த்து மிக தைரியமாக பேசும் வல்லமை பெற்றவள் நான். இதுவே எனக்கு எளிதாக வெற்றியை தேடித்தரும்.

செய்தியாளர் : மேற்கு தொகுதியில் மக்கள் பணியை சிறப்பாக செய்துள்ளதாக செல்லூர் ராஜூ கூறுகிறார். அவரை எப்படி எளிதாக வெல்வீர்கள்?

சின்னம்மா : தொகுதி மக்களுக்கு செல்லூர் ராஜு எதுவும் செய்யவில்லை. அதை மக்களிடம் கேட்டாலே தெரியும். மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடாது. பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கொடுக்காமல் இப்போது கொடுப்பதாக சொல்கிறார்கள். மேலும், நான் பணம் சம்பாதிக்கவும் வரவில்லை பணம் சம்பாதித்து விட்டும் வரவில்லை. எனவே என்னால் செல்லூர் ராஜுவை வெல்ல முடியும்.

செய்தியாளர் : வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

சின்னம்மா : தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது குறித்து சர்வே எடுக்க சொல்லியுள்ளோம்.6 மாதத்தில் தொகுதி மக்களின் குறைகளை முழுமையாக நிவர்த்தி செய்ய சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறேன்.மேற்குத் தொகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு உடனே நடவடிக்கை எடுப்பேன்.
Published by:Vijay R
First published: