Exclusive : ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும் - முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன்

Exclusive : ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும் - முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன்

முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன்

4 ஆண்டுகள் கவிழாமல் ஆட்சி நடத்தியது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விருப்பம். ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்து இருக்க முடியும்.

  • Share this:
ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும்...; எடப்பாடி பழனிச்சாமி யார் என்று எனக்கு தெரியும்...; இந்த தேர்தலுடன் தினகரன் கதை முடிந்துவிடும்... - ராஜ கண்ணப்பன் பிரத்யேக பேட்டி

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுக சார்பில் களம் காண்கிறார்.

கேள்வி: முதல் முறையாக முதுகுளத்தூர் தொகுதியில் களம் காண்கிறீர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

அ.தி.மு.க ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற எண்ணமும், ஸ்டாலினை முதலமைச்சராக வேண்டும் என்கிற எண்ணமும் மக்களிடம் எழுந்துள்ளது. நான் இந்த பகுதிக்கு புதியவர் அல்ல. 50 ஆண்டுகாலம் இந்த பகுதியில் அரசியல் நடத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் எனக்கு உள்ளது. முதுகுளத்தூர் தொகுதி என்னுடைய தாய் தொகுதி போன்றது. எனவே எளிதில் வெற்றி பெற்று விடுவேன்.

கேள்வி: பலமுனை போட்டியை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?  உங்களுடைய பலமாக எதை கருதுகிறீர்கள்?

சிறிய கட்சிகளை குறை சொல்லவில்லை. அவைகள் தேறாது. எந்த கட்சிகள் எதிர்த்து நின்றாலும் தி.மு.க 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.அரசியலில் நேர்மை உள்ளது. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது பல திட்டங்களை செயல்படுத்தியது அனைத்தும் என்னுடைய பலம்.

கேள்வி: வெற்றி பெறும் பட்சத்தில் தொகுதிக்கு என்ன செய்வீர்கள்?

ஒரு போக சாகுபடிக்கு உறுதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். வைகையில் இருந்து பார்த்திபனுர் வரை தண்ணீரை கொண்டு வந்து தேக்கி, அதை முதுகுளத்தூர் கொண்டு செல்கிற திட்டம்.  காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் கமுதி, சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஒரு போக சாகுபடி  உறுதி செய்யும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்த படும்.

கேள்வி: முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூவரின் அறிமுகம் பெற்றவர் நீங்கள்.. அவர்கள் யாருமே இல்லாமல் எதிர்கொள்கிற முதல் தேர்தல் எப்படி இருக்கிறது?

ஆளுமை மிக்க தலைவர்கள் யாருமே இல்லை, ஸ்டாலின் தவிர. மற்றவர்கள் எல்லோரும் டம்மி பீஸ், பெயருக்கு கட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள் அவ்வளவுதான். நான் அமைச்சராக இருந்தபோது எம்.எ.ல்.ஏ-வாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் நகர செயலாளராக இருந்தார். இப்போது அவர்கள் உயர் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களெல்லாம் எனக்கு பொருட்டே இல்லை.எனவே, ஸ்டாலினுடைய ஆளுமையின் மூலமாக தி.மு.க வெற்றி உறுதியாகியுள்ளது.

கேள்வி: சுமார் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர் நீங்கள்.. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சரின் 4 ஆண்டு செயல்பாடுகள் எப்படி உள்ளன?

4 ஆண்டுகள் கவிழாமல் ஆட்சி நடத்தியது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விருப்பம். ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்து இருக்க முடியும். ஆட்சி எத்தனை வருஷம் இருந்தது என்பது முக்கியமில்லை, எப்படி நடைபெற்றது என்பதே முக்கியம். இது ஊழல் ஆட்சி. எம்.எல்.ஏ-க்களை சரிசெய்து ஆட்சி நடத்தினால் மட்டும் போதுமா? ஏழரை கோடி மக்களுடைய செல்வாக்கைப் பெற வில்லை. இந்த ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சி என்பது இந்த தேர்தல் நிரூபிக்கும்.

கேள்வி: மக்களுடைய செல்வாக்கின் காரணமாகவே தான் முதல்வரானதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே..?

அவர் ஊர்ந்து சென்று, யார் காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதற்கு வீடியோவே இருக்கிறது.அவருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? அவராக பதவியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு செல்வாக்கு இருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறார். அவருக்கு தனிப்பட்ட முறையில் மக்கள் செல்வாக்கு கிடையாது. அவரைப் பற்றி எனக்கு தெரியும், அவர் ஒரு கல்லாப்பெட்டி. இவர் முதலமைச்சர் பதவிக்கு தகுதியான ஆள் அல்ல.

கேள்வி:தினகரன், சசிகலா அகியோரின் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என கருதுகிறீர்கள்?

சசிகலா அரசியலை விட்டு சென்றுவிட்டார் எனவே அவரைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை. தினகரனால் அரசியல் நடத்த முடியாது. அவர் ஏதோ ஒரு கட்சியை வைத்து எதையோ செய்து கொண்டிருக்கிறார். தினகரன் கட்சி பற்றி தெரிந்து தான் சசிகலா சென்று விட்டார்.தினகரனால் வெற்றி பெற முடியாது. இந்தத் தேர்தலுடன் அவருடைய கதை முடிந்துவிடும்.

கேள்வி: ஏற்கனவே அமைச்சராக இருந்துள்ளீர்கள். இந்த தேர்தலில் வென்றால் மீண்டும் அமைச்சா் வாய்ப்பை எதிர்பார்ப்பீர்களா?

மீண்டும் அமைச்சராவது என்பது  ஸ்டாலின் விருப்பம். யாருக்கு திறமை இருக்கிறதோ அவருக்கு கொடுப்பார். ஏற்கனவே மூன்று துறைகளில் நிர்வகித்து உள்ளேன். எந்தவிதமான வழக்கும் என்மீது இல்லை. எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை ஸ்டாலின் முடிவு செய்வார்.
Published by:Ramprasath H
First published: