தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட தேர்தல் ஆணையத்தை அனுமதிக்க வேண்டும்! - நீதிபதிகள் அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றம்

வாக்குப்பதிவுக்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் வழக்குகள் தொடராமல், தேர்தல் ஆணையத்தை, தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஓரு மாதத்துக்குப் பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதுடன், செலவும் ஏற்படுவதால், வாக்குப்பதிவு முடிந்த பின், அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிடக் கோரி குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கற்ஞர், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

  இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனைகளும், யோசனைகளும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

  மேலும், தேர்தல் நடத்தும் பணியை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் வழக்குகள் தொடர வேண்டும் என கேட்டுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொள்வதை விடுத்து, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட தேர்தல் ஆணையத்தை அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  இதேபோல, தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் மார்ச் 22ம் தேதி முதல் தேர்தல் நாள் வரை மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தலை நடத்தும் பணிகளில் இருந்து தேர்தல் ஆணையத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

  சட்டப்படி, தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் மதுக்கடைகள் மூடப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வேண்டுமானால் மனுதாரரும், அவரைச் சார்ந்தவர்களும் மதுபான கடைகளை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தனர்.
  Published by:Ram Sankar
  First published: