கருணாநிதி விலாசத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றிக்கொண்டிருக்கிறார் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி

89-ல் அவரும் எம்.எல்.ஏ நானும் எம்.எல்.ஏ. சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து கிளை செயலாளராகி எம்.எல்.ஏ-ஆவது எவ்வளவு கஷ்டம் என உங்களுக்கு தெரியும்.

  • Share this:
    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க வேட்பாளரும், அமைச்சருமான கே.பி.அன்பழகனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், ‘நான் கிளை செயலாளராக இருந்து ஒன்றியப்பொறுப்பு, மாநில பொறுப்பு, மாவட்ட பொறுப்பு, எம்.எல்.ஏ, எம்.பியாக மக்களின் ஆதரவோடு  இப்போது முதல்வராகியுள்ளேன். மு.க.ஸ்டாலின் அப்படி வந்தாரா? அவருடைய அப்பா முதலமைச்சராக இருந்தார். அவருடைய அப்பா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்தார். அவருடைய செல்வாக்கில் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆனார்.

    89-ல் அவரும் எம்.எல்.ஏ நானும் எம்.எல்.ஏ. நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனான். சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து கிளை செயலாளராகி எம்.எல்.ஏ-ஆவது எவ்வளவு கஷ்டம் என உங்களுக்கு தெரியும். நான் படிபடிப்பாக உழைத்து முன்னுக்கு வந்தேன். நான் இதனை சொன்னதும் காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி, ஸ்டாலினுக்கு ஜால்ரா போடுகிறார். அவரும் உழைத்துதான் வந்தார் என்று. ஸ்டாலின் எங்கப்போய் உழைச்சார்.

    கருணாநிதியின் செல்வாக்கில் ஸ்டாலின் வந்தார். அவருடைய விலாசத்தை வைத்துதான் நீங்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறீர்கள். ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்தாரா அவருடைய அப்பாவின் உழைப்பால் உயர்ந்தாரா. கருணாநிதி உடல்நலம் குன்றி இருந்த போது தி.மு.க தலைவர் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைக்கவில்லை. செயல் தலைவர் என்ற பொறுப்பைதான் ஒப்படைத்தார். அவருடைய தந்தையே அவரை நம்பவில்லை. எப்படி நாட்டு மக்கள் நம்புவார்கள். தி.மு.க-வினர் கோரப்பசியில் உள்ளனர்.

    நான் முதலமைச்சராக பதவியேற்றபின் கொஞ்சம் தொந்தரவா கொடுத்தார்கள். நிம்மதியாக இருக்க விட்டார்களா. தினமும் ஒரு போராட்டத்தை அறிவிப்பார். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார்கள். மக்களின் பேராதரவோடு அத்தனையும் முறியடிக்கப்பட்டது. இந்த ஆட்சியையும் கட்சியையும் மக்கள் தான் காப்பாற்றி கொடுத்தார்கள். உழைக்கும் அ.தி.மு.க ஏற்றம் பெறுகிறது. உழைப்பே இல்லாத தி.மு.க சரிந்துக்கொண்டிருக்கிறது. ஏதாவது பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஸ்டாலின் துடிக்கிறார்” என விமர்சனம் செய்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: