வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினர் மீது திமுக, விசிக கட்சி நிர்வாகிகள் தாக்குதல் - பரபரப்பு புகார்

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினரை திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தாக்கியதால் பரபரப்பு  ஏற்பட்டது.

  • Share this:
சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று மாலை நான்கு மணியளவில் டிரஸ்ட்புரம் அருகே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற துண்டறிக்கை பாஜக நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. அந்த துண்டு அறிக்கையில் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது எனவும் வார்த்தைகள் பொறிக்கப்பட்டது.

இதனால் துண்டறிக்கையை பார்த்த திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் துண்டறிக்கை விநியோகம் செய்த நிர்வாகிகளை தடுத்து நிறுத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் துண்டறிக்கையை விநியோகம் செய்தததால் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.  உரிய அனுமதி பெற்று தான் துண்டறிக்கையை விநியோகம் செய்து வருகிறோம், ஆனால் திமுக தோல்வி பயத்தில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவதாக பாஜகவினர் கோஷம் எழுப்பினர்

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர். பின்னர் வள்ளுவர்கோட்டம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி புகார் அளிக்கும்படி தெரிவித்தனர்.  இதனையடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் விவரங்கள் தாக்கியதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட கோடம்பாக்கம் காவல் ஆய்வாளர் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பாஜக நிர்வாகிகள்  மீண்டும் அதே இடத்தில் இன்று மாலை 4 மணிக்கு துண்டறிக்கை பிரச்சாரம் செய்வோம் என கோஷம் விட்டு விட்டு புறப்பட்டனர்.
Published by:Vijay R
First published: