கோவையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக கொள்கை பரப்புச்செயலாளர் திண்டுக்கல் லியோனி பரப்புரை மேற்கொண்டார். கார்த்திகேய சிவசேனாபதி நாட்டு மாடுகளை காக்க பல்வேறு பணிகளை செய்து வருபவர். நாட்டு மாட்டின் நன்மைகளை விளக்கி பேசிய போது அதற்கு உதாரணமாக பெண்களின் உடலமைப்பு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார் லியோனி. இதனை கையில் எடுத்த பாஜக மகளிரணியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இத்தகைய ஆணாதிக்க மனோபாவ நபர்கள் குறித்து கனிமொழி என்ன கூற விரும்புகிறார்? இதுதான் உங்கள் கட்சி பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையா? என பாஜக மகளிர் அணியினர் பொங்கினர். இதனால் அப்செட்டான கனிமொழி யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், “அரசியல் கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இது திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூக நீதி ஆகும்” என ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார்.
அதற்குள் மற்றொரு வீடியோ ஒன்று வெளியானது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வேறு சிக்கலை கொண்டுவந்தார். எடப்பாடி பழனிசாமி குறித்து ஒரு கருத்தை முன்வைக்க அது திமுகவுக்கு இடியாப்ப சிக்கலை உண்டாக்கியது. ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வரும் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விளக்கமளித்த ஆ.ராசா, ‘ திமுக தலைவர் ஸ்டாலின் பெற்றிருக்கும் இடத்தையும், எடப்பாடி பழனிசாமி பெற்றிருக்கும் இடத்தையும் ஒப்பீடு செய்வதற்காக நான் பேசிய சில வார்த்தைகளை வெட்டியும் ஒட்டியும் சமூகவலைதளத்தில் வந்து கொண்டிருப்பதாக அறிகிறேன். நான் அவரின் தனிப்பட்ட பிறப்பையே, புகழுக்கோ கலங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அரசியல் ஆளுமையை ஒப்பிட்டேன். அதை தவறாக புரிந்துக்கொண்டால் அதற்காக நான் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
தி.மு.க.வினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க.வினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது” எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.