Home /News /politics /

உங்களுக்கு உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள் - இறுதிக்கட்ட பரப்புரையில் மு.க.ஸ்டாலின்

உங்களுக்கு உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள் - இறுதிக்கட்ட பரப்புரையில் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஊழல் கறைபடிந்த கைகளைப்பிடித்துக் கொண்டு பிரதமர் ஊழலை ஒழிப்பேன் என்கிறார்.

  தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், திரு.வி.க.நகர்,கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

  அப்போது பேசிய ஸ்டாலின், “ முதலமைச்சர் முதல் கடைக்கோடி அமைச்சர் வரை அத்தனை பேரும் எல்லா துறைகளிலும் ஊழல் செய்து இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கரப்சன் - கமிஷன் – கலெக்சன். இதுதான் அவர்களது கொள்கை. அந்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. மே 2-க்கு பிறகு நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அவ்வாறு வந்ததற்குப் பிறகு உரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுக்கப் போகிறோம்.

  தமிழ்நாட்டிற்குப் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி , ஓ.பி.எஸ் கையையும் இ.பி.எஸ். கையையும் பிடித்துத் தூக்கி ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். ஊழல் கறைபடிந்த கைகளைப்பிடித்துக் கொண்டு பிரதமர் ஊழலை ஒழிப்பேன் என்கிறார். நான் கேட்கிறேன், நீட்டைக் கொண்டு வந்தது யார்? உதய் திட்டத்தைக் கொண்டு வந்தது யார்? ஜி.எஸ்.டி. சட்டத்தைக் கொண்டு வந்தது யார்? மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது யார்?  சிஏஏ சட்டத்தைக் கொண்டுவந்து சிறுபான்மை சமுதாயத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது யார்? புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது யார்?

  பா.ஜ.கவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் வரக்கூடாது, வளரக்கூடாது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதற்கு பல உதாரணங்கள் உண்டு. சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்திற்காக வந்தார். அவ்வாறு வந்தபோது கோவையில் பெரிய அராஜகத்தை நடத்தி காண்பித்தார்கள். அதை நீங்கள் தொலைக்காட்சிகளில், சமூகவலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.

  அங்கு பெரிய கலவரத்தை ஏற்படுத்தி, நாங்கள் கூட்டம் நடத்தப்போகிறோம், நீங்கள் கடைகளைத் திறக்கக்கூடாது என்று சொல்லி அடித்து உடைத்து, பெரிய ரகளையில் ஈடுபட்டு, பல பேருக்கு காயம் ஏற்பட்டு, ஏன் காவல்துறையினருக்கே காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொடுமைகள் நடந்தன.அதற்காகத்தான் அங்கு பாஜக வந்துவிடக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

  கலைஞருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் காட்டுவதற்கான நாள்தான், ஏப்ரல் 6.  14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை ஆரம்பித்து, மக்கள் பணியாற்றத் தொடங்கியவன் நான். இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டில் என்னுடைய கால் படாத கிராமமே இல்லை. நான் பயணம் செய்யாத நகரமே இல்லை.
  தமிழ்நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் நீளுகிற உதவிக்கரம் என்னுடையதுதான். அந்த அடிப்படையில், இறுதிக்கட்டப் பரப்புரையில், வாக்காளப் பெருமக்களிடம் அன்போடும், உரிமையோடும், பணிவோடும் கேட்கிறேன். தமிழ்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் உழைக்க நான் காத்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்காக நல்ல பல திட்டங்களை நான் வைத்திருக்கிறேன். அந்தத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்.

  மக்கள் பணியில் இருக்கிற நான், தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கிற ஒரே கோரிக்கை - உங்களுக்கு உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள். இந்த ஒற்றைக் கோரிக்கையைத்தான் உங்களிடம் நான் வைக்க விரும்புகிறேன். இந்தத் தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட கலைஞருடைய மகனாக நான் கேட்கிறேன்.உங்களுக்கு உழைக்கக் காத்திருக்கும் உங்களில் ஒருவனாக நான் கேட்கிறேன்.உங்களுக்கு உழைக்க எனக்கு ஆணையிடுங்கள்

  இந்த, "மு.க.ஸ்டாலின்" என்கின்ற பெயருக்குள் பெரியார் இருக்கிறார். அண்ணா இருக்கிறார். கலைஞர் இருக்கிறார். கழகம் இருக்கிறது. கழகத்தின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். எழுபதாண்டு காலமாக எழுந்து நிற்கும் கழகத்துக்காக உயிரைக் கொடுத்த எத்தனையோ உத்தமர்கள் இருக்கிறார்கள். பத்தாண்டு காலத்தில் தமிழகத்தைப் பாழ்படுத்திய அரசியல் கயவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆயுதம் உங்கள் கையில்தான் இருக்கிறது.” என்றார்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, DMK, Kolathur Constituency, MKStalin, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி