அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமிக்கு நினைவு மண்டபம் - ஸ்டாலின் வாக்குறுதி ; யார் இந்த அழகிரி?

திமுக தேர்தல் அறிக்கை

. அழகிரி சாமியின் நினைவாகத் தான் தனது மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார் கருணாநிதி.

 • Share this:
  தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.பட்டுக்கோட்டையில் அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி பெயரில் தன்மானத் தளபதி அழகிரி நினைவுமண்டபம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ? என்று முதலில் முழங்கியவர் அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி. பட்டுக்கோட்டையில் தன்மானத் தளபதி அழகிரி நினைவுமண்டபம் அமைக்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் போர்படைத் தளபதியாக விளங்கியவர்தான் இந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி. திராவிட இயக்கத் தலைவர்களில் அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழியுடன் அறியப்பட்டவர் அழகிரிசாமி.

  அழகிரிசாமி


  புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி கிராமத்தில் 1900-ம் ஆண்டு அழகிரிசாமி பிறந்தார். சிறுவயதில் தந்தை தவறியதால் அம்மாவின் சொந்தஊரான மதுரை மாவட்டத்தில் உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார். முதல் உலகப்போரில் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 1928-ம் ஆண்டு பெரியார் நடத்தி வைத்த முதல் சாதிமறுப்பு திருமணத்திற்கான அனைத்துப்பணிகளையும் செய்தது அழகிரிசாமி தான்.

  அழகிரிசாமி சிறந்த மேடைப்பேச்சாளர் அவரது பேச்சில் கனல் பறக்கும். சிம்மக் குரல் கொண்ட அழகிரிசாமியின் பேச்சில் அப்படி ஒரு கம்பீரம் இருக்கும். திருவாரூர் கூட்டத்தில் அழகிரிசாமியின் பேச்சைக் கேட்ட சிறுவன் தொடர்ந்து அவரது பேச்சுகளை கேட்கத் தொடங்கினான். அந்த சிறுவன்தான் பின்னாளில் கலைஞர் கருணாநிதி என்றானார். அழகிரி சாமியின் நினைவாகத் தான் தனது மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார் கருணாநிதி.

  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் பயணம் செய்தவர் அழகிரிசாமி. இந்தி எதிர்ப்பு பிரசாரத்தில் திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தமிழர் படைக்கு தலைமை தாங்கினார் அழகிரிசாமி. தமிழர் படைக்கு எந்தளவுக்கு வரவேற்பும் இருந்ததோ அதேபோல் எதிர்ப்பும் இருந்தது. கல்லடிக்கும், சொல்லடிக்கும் மத்தியில்தான் தமிழர் படையின் நடைப்பயணம் 42 நாள்கள் தொடர்ந்தது.

  அப்போது அழகிரிசாமிக்கு எதிர்ப்பாளர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். தமிழர் படையினர் அதனை அவிழ்க்க முயன்றனர். அதனை தடுத்த அழிகிரி சாமி, நானும் என் இயக்கத்தினரும் இறந்துவிடுவோம், செருப்புமாலை அணிவித்தவர்களும் இறந்துவிடுவார்கள். வருங்காலச் சந்ததிகள் மரியாதைக்குரிய வாழ்வு அளித்த தொண்டர்கள் என எங்கள் சமாதியில் மலர் தூவுவார்கள். உங்கள் சந்ததியினர் கூட உங்கள் சமாதிக்கு வரமாட்டார்கள்” என்று முழங்கினார்.

  இந்தித் திணிப்பை எதிர்த்து 1948-ம் ஆண்டு ஈரோட்டில் அண்ணா தலைமையில் திராவிடர் கழக தனி மாநில மாநாடு நடந்தது. ‘இது என் கடைசி மாநாடாக இருக்குமோ என அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளவே இங்கு வந்தேன்’ என அழகிரிசாமி பேசியது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

  காசநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த அழகிரிசாமி அப்போது படுத்தபடுக்கையாக இருந்தார். அவர் கூறியது போல அந்த மாநாடே அவருக்கு கடைசி மாநாடாக அமைந்தது. காசநோயின் தீவிரம் காரணமாக 28.03.1949-ல் மரணமடைந்தார். அழகிரிசாமி முழு வாழ்க்கையிலும் இயக்க தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. போதிய பணம் இல்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார்” என விடுதலையில் இரங்கல் செய்தி விடுத்தார் பெரியார். அழகிரிசாமியின் உடல் தஞ்சையை அடுத்த கறந்தட்டான்குடியில் புதைக்கப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் 1978-ல் பட்டுக்கோட்டையில் அழகிரிக்கு சிலை நிறுவினார் கருணாநிதி.
  Published by:Ramprasath H
  First published: