பிரதமர் மோடி தங்கள் தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.. நூதன அழைப்பு விடுக்கும் திமுக வேட்பாளர்கள்

பிரதமர் மோடி தங்கள் தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.. நூதன அழைப்பு விடுக்கும் திமுக வேட்பாளர்கள்

பிரதமர் மோடி

திமுக-வின் வெற்றியை உறுதி செய்வதற்கு, பிரதமர் மோடி தங்களது தொகுதிக்கு வந்து அதிமுக-வுக்கு பிரசாரம் செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர்கள் பலரும் டிவிட்டரில் நூதன அழைப்பு விடுத்துள்ளனர்.

 • Share this:
  திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பிரதமர் தனது தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரவேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் தமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கிண்டலாக குறிப்பிட்டார்.  அதனைத் தொடர்ந்து, மதுரை பாண்டி கோவில் பகுதியிலும் பிரதமர் மோடி பரப்புரை செய்த நிலையில், திமுக வேட்பாளர்கள் பலர், பிரதமருக்கு புதுவிதமான பிரசார அழைப்பை விடுத்துள்ளனர். அதில், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தங்கள் தொகுதிகளுக்கு வந்து வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் தங்களது வெற்றிவாய்ப்பு பன்மடங்கு பிரகாசமாகும் எனவும் திமுக வேட்பாளர்கள் பலரும் டிவிட்டரில் நய்யாண்டி கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, அருப்புக்கோட்டை திமுக எம்.எல்.ஏ., கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க பிரதமர் மோடி அருப்புக்கோட்டைக்கு வருகை வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  இதேபோல, திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், தனக்கு விழப்போகும் வாக்குகளை மேலும் அதிகரிக்க பிரதமர் மோடி திருச்செந்தூரில் பரப்புரை செய்யவேண்டும் என பதிவிட்டுள்ளார்.  தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளரான எஸ்.ஆர்.ராஜா, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததோடு, THANK YOU SIR என கிண்டலாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மொடக்குறிச்சி தொகுதியில் பிரதமர் மோடி அதிமுகவுக்காக பிரசாரம் செய்து, தன்னை கின்னஸ் சாதனை வெற்றி பெற உதவ வேண்டும் என திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.  இதேபோன்று எ.வ.வேலு, பரந்தாமன், இனிகோ இருதயராஜ், ராஜ கண்ணப்பன், ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் ஆர்.காந்தி, பல்லாவரம் வேட்பாளர் கருணாநிதி உள்ளிட்டோரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். பிரதமரை, எதிர்கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு கிண்டலாக அழைத்திருப்பது தேர்தல் அரசியலில் புதிய டிரெண்டாக அமைந்துள்ளது.
  Published by:Vijay R
  First published: