தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவி : திமுக - அதிமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு..?

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவி : திமுக - அதிமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு..?
நாடாளுமன்றம்
  • Share this:
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களை தேர்வு செய்ய முடியும். இரண்டு கட்சிகளிலும் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் அதற்காக சொல்லப்படும் காரணங்கள் என்ன? 

மாநிலங்களவையில் புதுச்சேரி உறுப்பினரையும் சேர்த்து தற்போதைய நிலையில் அதிமுகவிற்கு 11 எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில் 4 பேரது பதவிக்காலம் முடிவடைவதாலும், புதிதாக மூன்று பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாலும் அதிமுகவின் பலம் 10 ஆகக் குறையும். அதே நேரத்தில், திமுகவுக்கு தற்போது ஐந்து எம்.பி.,க்கள் உள்ள நிலையில், திமுகவின் திருச்சி.சிவா மற்றும் சி.பி.எம். டி.கே.ரங்கராஜான் ஆகிய இருவரின் பதவிக்காலம் முடிவடைகிறது, புதிதாக மூன்று பேர் தேர்வு செய்யப்பட உள்ளதால், மாநிலங்களவையில் திமுக வின் பலம் 7 ஆக உயர இருக்கிறது

மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை தேமுதிக தங்களுக்கு ஒரு மாநிலங்களவை பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது . அவ்வாறு வழங்கப்பட்டால் அது, விஜயகாந்த்தின் மைத்துனரும், தேமுதிக துணை பொதுச் செயலாளருமான எல்.கே.சுதீஷுக்கு ஒதுக்கப்படலாம்.


 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஒரு இடம் கேட்பதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு எம்பி பதவி கிடைத்தால்தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியும் என அதன் தலைமை நம்புகிறது. அந்த இடத்தைப் பெற தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விரும்புவதாகத் தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிரதமரை சந்தித்தபோது ராஜ்யசபா இடம் குறித்து வாசன் பேசியதாக செய்தி வெளியானது.

ஒருவேளை கூட்டணி கட்சிகள் யாருக்கும் இடம் ஒதுக்கப்படாத பட்சத்தில், மூன்று இடங்களுக்கும் அதிமுகவினரே நிறுத்தப்படுவர். இதனால், அக்கட்சியில் கடுமையான போட்டி நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் சேர்ந்து விட்டதால், தென் மாவட்டங்களில் யாதவர் சமுதாய வாக்குகளைப் பெற அதிமுகவில் வலுவான தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை சரிகட்ட, கோகுல இந்திராவிற்கு எம்.பி பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.இதுதவிர, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த முறையே தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இவர்களைத் தவிர, ஏற்கனவே மக்களவை துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை ராஜ்யசபா பதவிக்கு முயற்சிக்கிறார். ஏற்கனவே ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்த மனோஜ் பாண்டியனும் இப்பதவிக்கு முயற்சித்து வருகிறார். வேலூர் தொகுதி மக்களவை தேர்தலுக்காக இரண்டு முறை அதிக அளவு செலவழிதுள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் இந்த ரேசில் உள்ளார்.

அதிமுக போன்று கூட்டணிப் பிரச்னை திமுகவிற்கு இல்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மதிமுகவிற்கு கடந்த முறை ஒரு இடத்தை ஒதுக்கிவிட்டது. எனவே, தற்போது மூன்று இடங்களிலுமே திமுகவினரே நிறுத்தப்பட உள்ளனர். இதில், பதவி காலியாகும், திருச்சி சிவா மீண்டும் பதவியை பெற விரும்புகிறார். ஆனால் இவர் நான்கு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளதால் அவருக்கு வழங்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது

மேலும், மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ, திமுக சார்பில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை என்பதால், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச்செயலராக உள்ள புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இல்லையெனில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அசன் முகமது ஜின்னாவுக்கோ துறைமுகம் காஜாவுக்கோ வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது

இது தவிர, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிற்கு கண்டிப்பாக எம்.பி. பதவி உண்டு என திமுகவினர் கூறுகின்றனர். கடந்த முறை வைகோவிற்கு சீட் ஒதுக்கப்பட்ட போது, அவர் மீதான தேச துரோக வழக்கு காரணமாக அவரது மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது மாற்று வேட்பாளராக திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்தவர் என் ஆர் இளங்கோ.

இதுதவிர, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கண்டிப்பாக ஒரு இடம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வாறு ஒதுக்கப்படும் பட்சத்தில், அருந்ததி இனத்தைச் சேர்ந்த திமுகவின் துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமிக்கு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. காரணம், அருந்ததி இனத்தில் இருந்து திமுக சார்பில் இதுவரை ஒருவர் கூட எம்.பி.யாக இருந்ததில்லை.

போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு உள்ளதால் இந்தப் போட்டி மேலும் அதிகரிக்கக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
First published: February 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading