• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • DMDK : தேர்தலுக்கு தேர்தல் தேயும் தேமுதிக: குமுறும் தொண்டர்கள்

DMDK : தேர்தலுக்கு தேர்தல் தேயும் தேமுதிக: குமுறும் தொண்டர்கள்

தேமுதிக

தேமுதிக

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தாங்களே மாற்று எனக் கூறி நடிகர் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சி தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது

  • Share this:
திமுக,  அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தாங்களே மாற்று எனக் கூறி நடிகர் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சி தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது .

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது 16வது சட்டப்பேரவை தேர்தல்.  தேர்தலுக்கு முன்பாக, தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் இருப்பதாக பொதுவான கருத்து முன் வைக்கப்பட்டது.

ஆனால், 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கியபோது, கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருமே தீவிர அரசியலில் இருந்தனர். அவர்களை எதிர்த்து கட்சியையும் தொடங்கி மக்களிடமும் விரைவாக சேர்த்தார் விஜயகாந்த்.

லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவே தான் கட்சி தொடங்கியதாகவும் மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி என தொடர்ந்து கூறி வந்த விஜயகாந்த், கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே 5 தேர்தல்களை தனித்து சந்தித்தார்.  2006 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக, விஜயகாந்த் போட்டியிட்ட விருதாச்சலம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

திமுக, அதிமுக மட்டுமல்லாது அப்போது மூன்றாவது பெரிய கட்சி என கூறிகொண்ட பாமகவை எதிர்த்தும் விஜயகாந்த் அரசியல் செய்தார். இதற்காகவே, பாமகவின் பலம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றான விருதாச்சலத்தை தேர்வு செய்து போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். 2006 சட்டப்பேரவை தேர்தலில் 8.36 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது.

இதேபோல், 2009 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் தேமுதிய தனித்தே போட்டியிட்டது 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை  பெற்ற தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை தன்வசமாக்கி வலுவான கட்சியாக தன்னை நிரூபித்தது.

2011ம் சட்டப்பேரவை தேர்தலின்போது தேமுதிகவின் வாக்குவங்கி தங்களுக்கு உதவும் என கருதிய அதிமுக, அக்கட்சிக்கு 41 தொகுதிகளை வழங்கி கூட்டணியில் இணைந்துக்கொண்டது. அந்த தேர்தலில் தேமுதிகவும் 29 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் வாக்கு வங்கி 7.9 சதவீதமாக குறைந்தது.

பின்னர் கூட்டணி முறிவின் காரணமாக, பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிக உருமாறியது.  எனினும், தேமுதிகவுக்கான தொண்டர்கள் பலம் என்பது குறையாமலேயே இருந்தது.

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக, அதிமுகக்கு மாற்றாக பாஜகவுடன் கூட்டணி அமைந்து 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. எனினும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், அதன் வாக்கு சதவீதமும் 5.1% என குறைந்து போனது.

இதற்கு எல்லாம் மேலாக, 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் எடுத்த தப்பான முடிவே தேமுதிகவின் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. அதிமுக மீது இருந்த கோபம் காரணமாக திமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடும் என்று பரவலாக பேசப்பட்டது. எனினும் சீட் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. பழம் நழுவி பாலில் விழும் என தேமுதிக உடனாக கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதியும் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், தமிழ்மாநில காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து மக்கள் நல கூட்டணி என்ற குடையின் கீழ் தேமுதிக தேர்தலை சந்தித்தது. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.



ஆனால், தேர்தலில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. அதன் வாக்கு வங்கியும் 2.39 சதவீதம் என வீழ்ச்சி அடைந்தது. இதன் பின்னர் அக்கட்சியில் இருந்து பலரும் விலகி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இதையெல்லாம் தாண்டி விஜயகாந்தின் உடல்நலம் குன்றியது தொண்டர்களை வெகுவாக கவலையடைய செய்தது. தேமுதிகவின் எதிர்காலம் என்னவாகும் என கேள்வி எழுந்தபோது, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, கட்சி நடவடிக்கைகளில் தன்னை பிரதானப்படுத்த தொடங்கினார்.

2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி, வடசென்னை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளில்  போட்டியிட்ட தேமுதிக, 4 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அதன் வாக்கு வங்கியும் 2.19 சதவீதமாக குறைந்தது. இந்த தோல்வி அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்தது.

தற்போது நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற தேமுதிக எவ்வளவோ முயன்றது. 45 தொகுதி, 25 தொகுதி என தேமுதிக தனது பேரத்தை குறைத்துகொண்டே வந்தது. இறுதியில் 18 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட் வேண்டும் என கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்காத அதிமுக அதிகபட்சம் 13 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என பிடிவாதம் காட்டியது. அதிமுகவுடான கூட்டணி ஒருசில தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. 13 தொகுதிகளில் சிலவற்றையாவது வெல்ல முடியும் என்பது தொண்டர்கள், நிர்வாகிகளின் நம்பிக்கையாக இருந்தது. எனினும், குறைந்த தொகுதிகளை ஏற்க மறுத்த தேமுதிக, கூட்டணியில்  இருந்து வெளியேறியது.

அமமுக கூட்டணியில் 60 இடங்கள் கிடைத்தால் அந்த கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருதாச்சலம் தொகுதியில் களம் கண்டார். விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து வாக்கு சேகரித்தார். விஜய்காந்தின் பேச்சை கேட்டு ஈர்க்கப்பட்டு தேமுதிகவில் இணைந்த தொண்டர்கள் பலர், தங்கள் தலைவரின் தற்போதைய நிலை கண்டு உள்ளுக்குள் குமுறினர்.

தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மற்ற கட்சிகளை விட தேமுதிக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.  பிரேமலதா உட்பட அனைவருமே தோல்விமுகம் கொண்டுள்ளனர். வாக்கு வங்கியும் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.  விஜயகாந்தின் உடல் நிலை, கட்சியின் நிலை என ஒரே நேரத்தில் இரு வேதனைகளால் தொண்டர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரே காலத்தில் எதிர்க்கட்சி என்ற வலுவான நிலையில் இருந்த தேமுதிக தற்போது எதிர்காலம் என்ன என்பதே தெரியாமல் தத்தளித்து வருகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: