பாமக இருந்தால்தான் எடப்பாடி தொகுதியில் முதல்வர் வெற்றி பெற முடியும்: தேமுதிக கருத்து

பாமக இருந்தால்தான் எடப்பாடி தொகுதியில் முதல்வர் வெற்றி பெற முடியும்: தேமுதிக கருத்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

எங்கள் தரப்பில் 2011 போல் 41 தொகுதிகள் கேட்கபட்டது. 8 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறினர். இறுதிகட்ட பேச்சின் போது 13 தொகுதிகள் கொடுக்கலாம் என்றார்கள்.

  • Share this:
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதையடுத்து தேமுதிகவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் அனகை முருகேசன் தாங்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அவர் ஊடகத்தில் கூறும்போது, இரு அமைச்சர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாமகவை கெஞ்சிக் கூத்தாடி கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர். பாமக இருந்தால்தான் எடப்பாடி தொகுதியில் முதல்வரும் திருச்செங்கோட்டில் தங்கமணியும் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது.

ஆகவே அவர்களுக்குக் கட்சியை விட இந்த இரு தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். அதனால் பாமகவை எப்படியாவது தக்க வைக்க முடிவெடுத்தனர். பாஜகவை விட அதிமுகவுக்கு பாமகதான் முக்கியம், இது பாஜகவுக்கே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் தரப்பில் 2011 போல் 41 தொகுதிகள் கேட்கபட்டது. 8 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறினர். இறுதிகட்ட பேச்சின் போது 13 தொகுதிகள் கொடுக்கலாம் என்றார்கள். ஆனால் 24 தொகுதிகளுக்குக் கீழ் வேண்டாம் என்று தொண்டர்கள் உட்பட பலரும் வலியுறுத்தினர். அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை கூட்டணி முறிந்து விட்டது.

தொகுதிப் பங்கீடு பேச்சில் முதல்வரே கோபமாகப் பேசியிருக்கிறார். மக்கள் மத்தியில் கட்சி எங்குமே இல்லை. 13 தொகுதிகள் என்பதே அதிகம். வாங்கிய வாக்குகள், கட்சியின் நிலை எல்லாம் எங்களுக்குத் தெரியும் 13 தொகுதிகள் என்பதே அதிகம் என்ற தொனியில் பேசியுள்ளார். லேட்டஸ்ட் சர்வே எடுக்கப்பட்டு உங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார், இவ்வாறு கூறினார் அனகை முருகேசன்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ் தங்கள் கூட்டணிக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வரவேண்டும் என்று கூறி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published: