காங்கிரஸ் கட்சியின் தேசிய மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, கோவா காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் மத்தியப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தெலங்கானா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக எம்.பி., ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக ராகுல் காந்தி, ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டியில் நிரந்தர அழைப்பாளர்களாக மாணிக்கம் தாகூர், செல்லகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.