காங்கிரஸ் vs இடதுசாரிகள் மேற்குவங்கத்தில் நண்பன்; கேரளாவில் எதிரி!

காங்கிரஸ் vs இடதுசாரிகள் மேற்குவங்கத்தில் நண்பன்; கேரளாவில் எதிரி!

தங்கக் கடத்தல் விவகாரம் பினராயி விஜயன் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும், அனைத்து விமர்சனங்களையும் தாண்டி தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.

  • Share this:
கேரளாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க இடது ஜனநாயக கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், கேரளாவில் அக்கட்சியை எதிர்த்து களம் இறங்குகின்றன.

கேரள சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கேரளாவை பொறுத்தவரை இடது ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.

அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களம் காண்கிறது. தொகுதி பங்கீடு குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக, தமிழக எல்லை மாவட்டங்களில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது.

தங்கக் கடத்தல் விவகாரம் பினராயி விஜயன் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும், அனைத்து விமர்சனங்களையும் தாண்டி தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.

அசாம் நிலவரம்:

இதேபோல் அசாம் மாநில தேர்தல் களமும் விறுவிறுப்படைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போடோலாந்து மக்கள் முன்னணி, கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மெகா கூட்டணியில் இணைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், அன்சாக்லிக் கண மோர்ச்சா உள்ளிட்ட 7 கட்சிகளுடன் காங்கிரஸ் தமது கூட்டணியை வலுப்படுத்தியுள்ளது. எனினும், பாஜக கூட்டணியில், அசாம் கணபரிஷத் நீடிக்கிறது.

பாஜகவுக்கு எதிராக இணைந்துள்ள, கூட்டணி கட்சிகள் ஒருமித்தமாக முடிவு செய்து, முதல்வர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகில் கோகோய் வலியுறுத்தியுள்ளார்.
Published by:Arun
First published: