• HOME
 • »
 • NEWS
 • »
 • politics
 • »
 • ப.சிதம்பரம் ஆதரவாளருக்கு சீட்: எதிர்க்கும் ராமசாமி தரப்பு - கோஷ்டி பூசலுக்கு மத்தியில் காரைக்குடியில் வெற்றி பெறுமா காங்கிரஸ்

ப.சிதம்பரம் ஆதரவாளருக்கு சீட்: எதிர்க்கும் ராமசாமி தரப்பு - கோஷ்டி பூசலுக்கு மத்தியில் காரைக்குடியில் வெற்றி பெறுமா காங்கிரஸ்

காரைக்குடி

காரைக்குடி

காரைக்குடியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் நேரடியாக மோதும் சூழலில் அக்கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மூத்த நிர்வாகிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 • Share this:
  காரைக்குடி சட்டமன்ற தொகுதியை திராவிட முன்னேற்ற கழகத்திடம் இருந்து காங்கிரஸ் கட்சி போராடி பெற்றுள்ளது. இது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த தொகுதியாகும். சிதம்பரத்தின் தீவிர அழுத்தத்தால், தி.மு.கவினர் எவ்வளவோ போராடியும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியை காங்கிரசுக்கே தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. காரைக்குடியில் நடக்கும் கோஷ்டி பூசலால் ப.சிதம்பரம் கடும் அப்செட்டில் உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வரவேற்பு நிகழ்ச்சியை தொகுதி எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி மற்றும் ஆதரவாளர்கள் புறக்கணித்து உள்ளனர். அதுமட்டுமின்றி தேவகோட்டையில் சுவரொட்டி மூலம் தங்களது எதிர்ப்பையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

  இதுகுறித்து பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், கடந்த  சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை மனதில் வைத்து தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதியை ஒதுக்கியது. காங்கிரஸ் கேட்ட சில தொகுதிகள் கிடைக்கவில்லை. ப.சிதம்பரத்தின் சொந்த தொகுதியாக இருந்தாலும் காரைக்குடியை போராடி பெற வேண்டிய நிலைதான் இருந்தது. வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதிலே கடும் போட்டி நிலவியது. ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான மாங்குடி, கே.ஆர். ராமசாமி ஆதரவாளரான தேவகோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமி, பிரபல தொழிலதிபரான படிக்காசுவின் மகன் பாலசுப்ரமணியம் ஆகியோர்களின் பெயர்கள் அடிப்பட்டது. எனினும் ப.சிதம்பரம் கைக்காட்டும் நபர்தான் காரைக்குடி வேட்பாளர்.

  ப.சிதம்பரம்


  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு போதிய நிர்வாகிகள் வரவில்லை. சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு ப.சிதம்பரம் லிஸ்டோட வந்தார். லிஸ்டில் 62 பேர் இருந்தும் கூட்டத்துக்கு வந்தது 22பேர்தான். இதுலயே ப.சிதம்பரம் அப்செட் ஆகிவிட்டார். இந்நிலையில்தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தலைமை வெளியிட்டது. இதில் காரைக்குடி வேட்பாளராக மாங்குடி போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.

  சென்னையில் இருந்து காரைக்குடி திரும்பிய மாங்குடிக்கு கோவிலூரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவகோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமிக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி மற்றும் வேலுச்சாமி ஆதரவாளர்கள் இந்நிகழ்வை புறக்கணித்துள்ளனர். அதுமட்டுமின்றி தேவகோட்டை நகர் முழுவதும் வேலுச்சாமிக்கு சீட் கொடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சுவரொட்டி மூலம் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். ’வெற்றி வேட்பாளர் வேலுச்சாமியை காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கவில்லையெனில் காரைக்குடி தொகுதியினை இழக்க நேரிடும்’ என நோட்டீஸ் அடித்துள்ளனர்.

  காங்கிரஸ் கட்சியினர் அடித்துள்ள நோட்டீஸ்


  அ.தி.மு.க கூட்டணியில் காரைக்குடி தொகுதி பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். இருதேசிய கட்சிகளும் இந்த தொகுதியில் நேரடியாக மோதுகின்றன. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மூத்த நிர்வாகிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வேலுச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாங்குடி தரப்பு ஈடுபட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்தை நடந்துள்ளது. இணக்கமாக செயல்பட வேண்டி சமாதானம் பேசியுள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

  செய்தியாளர்: முத்துராமலிங்கம்  உடனடி செய்தி இணைந்திருங்கள்...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: