• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • இப்படியே போனா அடுத்த எலெக்‌ஷன்ல 25 சீட் கூட கிடைக்காது - ப.சிதம்பரம் வேதனை

இப்படியே போனா அடுத்த எலெக்‌ஷன்ல 25 சீட் கூட கிடைக்காது - ப.சிதம்பரம் வேதனை

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

தோழமை கட்சிகளை மட்டுமே நம்பி தேர்தலை நடத்திருவோமா. இந்த தொகுதியை இப்ப எதுக்கு வாங்கினோம்னு தெரியல. இது சிட்டிங் எம்.எல்.ஏ இருக்கிற தொகுதி. நாடாளுமன்றத் தேர்தலில் நாம் இங்க வெற்றிப்பெற்றிருக்கிறோம். பூத் கமிட்டி கூட்டத்துக்கே பொறுப்பாளர்கள் வரலைன்னு சொன்னால் வேட்பாளர்கள் நிற்காமல் போய்விடுவார்கள். தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு விருப்பம் இல்லையா என ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ்காரர்களுக்கு  விருப்பம் இல்லையா என்ன. நமக்கு கிடைத்த தொகுதியில் பணி செய்வதற்கு ஆட்கள் இல்லையா என காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி கூட்டத்தில் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

    சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க உள்ளது. இதன்காரணமாக 173 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை அளந்தே கொடுத்துள்ளது தி.மு.க தலைமை. காங்கிரஸ் கட்சிக்கு இந்தமுறை 25 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களையும், 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களையும் தி.மு.க.விடம் இருந்து காங்கிரஸ் பெற்று இருந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 41 தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிட்டது அ.தி.மு.கதான். இதில் 33 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கியதே தி.மு.க தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்தது.

    இதன்காரணமாகவே இந்தமுறை காங்கிரஸ் கட்சி 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த தொகுதியில் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும் வேறு வழியில்லை என்பதால் ஒப்புக்கொண்டனர். சரி நமக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதியில் கவனம் செலுத்தலாம் என நினைத்தால் காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சி பூசல் மாநில தலைவர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. ப.சிதம்பரம் கூட்டத்துக்கு வந்த பின்னர் சில நிர்வாகிகள் தாமதமாக வந்துள்ளனர். மேலும் சில பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி கூட்டத்துக்கே வரவில்லை இதனால் ப.சிதம்பரம் அப்செட் ஆகிவிட்டார்.

    பூத் கமிட்டி கூட்டத்துக்கு பொறுப்பாளர்களே வராமல் இருந்தால் அடுத்த முறை இந்த 25 சீட்டுகளும் நமக்கு கிடைக்காது. காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஒத்துழைப்பே இல்லை. இப்படி இருந்தால் எப்படி. காரைக்குடியில் எதுக்கு காங்கிரஸ் கட்சி போட்டி போடனும். நமக்கு கொடுத்த காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துடுவோமா. நமக்கு கிடைக்காத தொகுதி வேணும் வேணும்னு சண்டை போடுறீங்க. நமக்கு ஒதுக்குன தொகுதியில வேலை பார்க்க முழுமையா நிர்வாகிகள் வருவதில்லை. இதில் தலைமையை குறை சொல்வது தவறு.

    தோழமை கட்சிகளை மட்டுமே நம்பி தேர்தலை நடத்திருவோமா. இந்த தொகுதியை இப்ப எதுக்கு வாங்கினோம்னு தெரியல. இது சிட்டிங் எம்.எல்.ஏ இருக்கிற தொகுதி. நாடாளுமன்றத் தேர்தலில் நாம் இங்க வெற்றிப்பெற்றிருக்கிறோம். பூத் கமிட்டி கூட்டத்துக்கே பொறுப்பாளர்கள் வரலைன்னு சொன்னால் வேட்பாளர்கள் நிற்காமல் போய்விடுவார்கள். தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு விருப்பம் இல்லையா என்ன.

    கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். இப்போ 25 தொகுதியிலதான் போட்டியிடுறோம். நாம 16 தொகுதியில போட்டியிடல இப்ப காரைக்குடியை திருப்பி கொடுத்துட்டா 17 தொகுதியாகிடும். மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம் பிரச்சாரத்துக்கே சென்றுவிட்டனர். நாம இன்னும் பூத் கமிட்டிதான் நடத்திட்டு இருக்கோம். சிவகங்கை சட்டப்பேரவை தொகுதியில் நிர்வாகிகள் முழுமையாக வந்த சட்டப்பேரவை தொகுதியை வாங்காமல் விட்டுவிட்டோம் என கூட்டத்தினரிடம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் சிதம்பரம்.

    ப.சிதம்பரம்


    இதனை முடித்துக்கொண்டு தேவக்கோட்டைக்கு சென்றுள்ளார் ப.சிதம்பரம். தேவகோட்டை வேலுச்சாமி என்பவருக்கு சீட் வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தேவகோட்டையை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் நகர் மன்றத் தலைவர் வேலுசாமிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கோரி அவருடைய ஆதரவாளர்கள் சிதம்பரத்திடம் மனு அளித்தனர். நீண்ட நாட்களாக கட்சிக்கு உழைக்கும் வேலுச்சாமியை காரைக்குடி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்க ப.சிதம்பரம் வலியுறுத்த வேண்டும் என்று முற்றுகையிட்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கடுப்பான ப.சிதம்பரம் பூத் கமிட்டி கூட்டத்தை பாதியிலேயே முடித்து கிளம்பி சென்றார். இதனால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர் : முத்துராமலிங்கம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: