வயநாட்டில் 4 காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா; கட்சித் தலைமை மீதான அதிருப்தியால் விலகல் என தகவல்!

வயநாட்டில் 4 காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா; கட்சித் தலைமை மீதான அதிருப்தியால் விலகல் என தகவல்!

வயநாட்டில் 4 காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் , காங்கிரஸில் இருந்து விலகியது தொடர்பாக கூறுகையில், வயநாட்டில் 3 பேர் கொண்ட கும்பல் தான் காங்கிரஸில் அதிகார வர்க்கமாக விளங்குகிறது என குற்றம்சாட்டினார்.

  • Share this:
ராகுல் காந்தியின் தொகுதியான வயநாட்டில் 4 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே தான் பிரதான போட்டி. அங்கு இவ்விரு கூட்டணிகளுமே வலிமைவாய்ந்தவையாக சம பலத்துடன் உள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமை அமைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது ராகுல் காந்தி உட்பட காங்கிரஸாருக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், INTUC தொழிற்சங்கத்தின் மாநில செயலாளருமான பி.கே. அனில்குமார் மற்றும் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஜயா வேணுகோபால் ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ராஜினாமா குறித்து கூறுகையில், மாநில மட்டும் மாவட்ட காங்கிரஸ் தலைமை தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதால் தான் காங்கிரஸில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் , காங்கிரஸில் இருந்து விலகியது தொடர்பாக கூறுகையில், வயநாட்டில் 3 பேர் கொண்ட கும்பல் தான் காங்கிரஸில் அதிகார வர்க்கமாக விளங்குகிறது என குற்றம்சாட்டினார். அவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார்.

வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், INTUC தொழிற்சங்கத்தின் மாநில செயலாளருமாக இருந்த பி.கே. அனில்குமார், லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

இதனிடையே அடுத்தடுத்து 4 முக்கியத் தலைவர்கள் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தது கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கள் நிலவரம் என்ன என்று தெரிந்துகொள்வதற்காக மூத்த தலைவர் கே.சுதாகரன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று வயநாடு கட்சி அலுவலகத்திற்கு விரைந்துள்ளனர்.

இதனிடையே வயநாட்டில் சிபிஎம் தலைவர் ஈ.சங்கரன் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். தனக்கு சுல்தான் பத்தேரி தொகுதி ஒதுக்கப்படும் என்ற உறுதியில் பேரில் அவர் மீண்டும் காங்கிரஸில் இணைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சிபிஎம்-ல் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: