`பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி லக்கி பிரைசாக கிடைத்துள்ளது!’ - முதல்வரை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்

`பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி லக்கி பிரைசாக கிடைத்துள்ளது!’ - முதல்வரை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பாண்டிய மன்னனை கேள்வி கேட்ட கண்ணகி போல் இந்த ஆட்சியின் அவலத்தை நீங்கள் கேட்க முடியாது. பாண்டிய மன்னனிடம் இருந்த மாண்பை  பழனிச்சாமி அரசு அமைச்சர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

  • Share this:
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கலைஞர் அரங்கில் உங்கள் தொகுதியில்  ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``தமிழர்களின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் நம் கண்முன்னே நிறுத்தியவர் கலைஞர். பாண்டிய மன்னனை கேள்வி கேட்ட கண்ணகி போல் இந்த ஆட்சியின் அவலத்தை நீங்கள் கேட்க முடியாது. பாண்டிய மன்னனிடம் இருந்த மாண்பை  பழனிச்சாமி அரசு அமைச்சர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்த பினாமி அரசு தமிழகத்தை ரூ.5 லட்சம் கோடி கடனாளி ஆக்கி உள்ளது” என்று அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``சசிகலா சிறைக்கு சென்றதாலும்,  பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதாலும் பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி லக்கி பிரைசாக கிடைத்துள்ளது. ஆனால் குண்டூசி அளவு நன்மைகூட  செய்யாமல் 4 ஆண்டுகளாக தமிழகத்தை வீணாக்கி விட்டார். தமிழகத்தை 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றவர்கள், ஊழல் செய்வதே இவர்கள் வேலை. தேர்வுக்கு முதல்நாள் படிக்கும் மாணவன் போல் தேர்தலுக்கு முன்பு நன்மை செய்வதுபோல் முதல்வர் நடிக்கிறார். இப்போது   ரோஷம் வந்தவர்போல பிஜேபிக்கு நான் அடிமையில்லை என்று உடுமலைபேட்டை பிரச்சாரத்தில் பேசுகிறார்.” என்று பேசினார்.

    தேர்தலுக்காக ஷோ காட்ட பிரதமர் சென்னை வந்துள்ளதாக கூறிய ஸ்டாலின், ``அவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டி துவங்காதது குறித்தும், நீட் தேர்வு விலக்கு, 7 பேர் விடுதலை குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும், அதனை  தமிழக சட்டசபை தீர்மானத்தை மதிக்காமல் உள்ளது குறித்து பிரதமர் மோடியிடம் கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உள்ளதா? கொத்தடிமை அதிமுக அரசால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 19,000 கோடி வழங்காததை கேட்க முடிந்ததா? 14-வது நிதி ஆணையம் ரூ.2,500 கோடியை கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்காததை முதல்வரால் ஏன் கேட்டு பெறமுடியவில்லை?” என்று கேள்விகளை எழுப்பினார்.

    மேலும், ``மத்திய அரசு தமிழக அரசை கொத்தடிமையாக நினைக்கிறது. முதல்வரின் உறவினர்கள் 3,000 கோடி டென்டர் ஊழல் விவகாரம் அமைச்சர்களின் ஊழல் வருமான வரித்துறையின் மூலம் வெளிவந்துவிடும் என்பதால் அதிமுக அரசு அடிமையாக உள்ளது. அதிமுக அரசால் எந்த நன்மையும் செய்ய முடியாது. நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். என்னிடம் அளித்த மனுக்கள் என் முதுகில் ஏற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாளில் தீர்வு காணப்படும். முதல்வர் உறவினர்கள் மற்றும் பினாமிகள் மூலம் செய்த ஊழல் வழக்கு மத்திய அரசின் கையில் உள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கை நிறைவேறும் நம்பிக்கையோடு செல்லுங்கள்” என்று பேசினார்.
    Published by:Ram Sankar
    First published: