கரூர் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் வேட்பாளர் தானேஷ் என்ற முத்துக்குமார், குளித்தலை வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோரை ஆதரித்து, கரூர் பேருந்து நிலையம் பகுதியில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பனி என்றும், அதில் பங்கு போடுபவர் செந்தில்பாலாஜி என்றும் கூறினார். அதிமுகவின் ஆட்சியை கவிழ்க்க எட்டப்பன் வேசம் போட்டவர் என்றும் செந்தில்பாலாஜியை, கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக உறுப்பினராக இருந்தபோது செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினை பற்றி பேசியவை அனைத்தும் அவைக்குறிப்பில் உள்ளதாகவும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு சந்தர்ப்பவாதத்திற்காக திமுகவில் இணைந்திருப்பதாகவும் விமர்சித்தார். செந்தில் பாலாஜி டெபாசிட் இழப்பார் என்றும் கூறினார்.
அதன்பின் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி க.பரமத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது, அரவக்குறிச்சி பகுதிக்கும் காவிரி உபரி நீரை கொண்டு வந்து பாசனத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாஜகவிற்கு அதிமுக அடிமையாக உள்ளதாக திமுகவினர் பேசுவதை சுட்டிக்காட்டிய முதல்வர், அதிமுக வலிமை பெறவும், அரசு சிறப்பாக நடக்கவும் பிரதமர் உறுதுணையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
இஸ்லாமியர்களை பாதுகாத்து வரும் ஒரே அரசு அதிமுக அரசு என்றும் அரசியலுக்காக இல்லாமல் மனிதாபிமானத்தால் இதனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், திமுகவினர் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற அதிமுக மீது அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் பரமசிவத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர், விவசாயிகளை கொச்சைப்படுத்திப் பேசும் தலைவர் நாட்டுக்கு தேவையா என்று கேள்வியெழுப்பினார். திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநில விவசாய அணி செயலர் சின்னசாமி, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய சின்னசாமி, தனியாக முடிவு எடுக்க முடியாத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளதாக விமர்சித்தார்.