சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகராஜூக்கு ஆதரவாக,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுகவின் பொய் பேச்சு காரணமாகவே, 10 ஆண்டுகாலமாக அக்கட்சி வனவாசத்தில் இருப்பதாக கூறினார்.
அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு எழுப்ப தயாரா என சவால் விடுத்த அவர், குழப்பத்தை விளைவித்து கொல்லைப்புறம் வழியாக
ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க பார்ப்பதாகவும் விமர்சித்தார்.
சிவகங்கை தொகுதி
அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து அரண்மனை வாசலில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர், திமுக-வை வீழ்த்துவதே தனது குறிக்கோள் என்றார். பின்னர் மானாமதுரை தொகுதியில்
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி யார் என தெரியாது என்று கூறி வந்த ஸ்டாலினால், தற்போது தனது பெயரை உச்சரிக்காமல் அரசியல் நடத்த முடியாது என விமர்சித்தார்.
அருப்புக்கோட்டையில்
அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர், திமுக ஒரு கார்ப்ரேட் கம்பெனி என்றும், அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு உடனே மாவட்ட செயலாளர் பதவி வழங்குவதாகவும் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து விருதுநகரில்
பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன், சிவகாசியில்
அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் ஆகியோருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும்
தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மதவெறி, இன பிரிவினையை தூண்டி ஆட்சிக்கு வர நினைப்பவர்களை நாம் வீழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பா.ஜ.க வும் அ.தி.மு.கவும் தி.மு.க வை விமர்சித்து தான் பிரச்சாரம் செய்து வருவதாக விமர்சித்தார்..
ஜெயலலிதா கொடுத்துவிட்டு சென்ற அதிகாரத்தை வைத்து அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று சாடிய ஸ்டாலின், தங்களை காப்பாற்றிக்கொள்ளவே 4 ஆண்டுகளை செலவழித்துள்ளதாகவும் விமர்சித்தார். அதிமுகவில் இன்னமும் கோஷ்டி சண்டை நிலவி வருகிறது என்று ஸ்டாலின் கூறினார்.
குளித்தலையில் வேட்பாளர் மாணிக்கத்திற்கு ஆதரவாக, வீதியில் நடந்து சென்று
ஸ்டாலின் வாக்குசேகரித்தார். அப்பகுதி மக்கள் ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.