ஓபிஎஸ்-ஈபிஎஸ் காரசார விவாதம் : முதலமைச்சர் பதவியை தூக்கி எறியத் தயார் என எடப்பாடி பழனிசாமி ஆவேசப்பட்டதாக தகவல்

கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இரண்டு பேரும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், இருவர் மட்டுமே கட்சி இல்லை என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 1:28 PM IST
  • Share this:


அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் வரும் 7-ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். செயற்குழுவில் ஓபிஎஸ்-இபிஎஸ் காரசார விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியான நிலையில், இறுதி முடிவை மூத்த தலைவர்கள் எடுக்கவுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில், மூத்த தலைவர்களான தம்பிதுரை, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. அப்போது பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகரன், வெளிப்படையாக இபிஎஸ் தரப்பை சாடியதாகவும், ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஓரம் கட்டுவதாக ஆவேசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ். இடையே கடும் விவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிய தமிழகமே காத்திருப்பதாக கூறியதாக தெரிகிறது. அப்போது, தங்கமணி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்போது முதலமைச்சரை மாற்றி அறிவித்தால், நமது வேட்பாளர் சரியில்லை என நாமே கூறியதுபோல இருக்கும் என நத்தம் விஸ்வநாதன் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அப்போது குறுக்கிட்ட ஓ.பி.எஸ்., தன்னை தனிமைப்படுத்துவதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கூறியதோடு, இந்த அரசுக்கு மட்டுமே துணை முதலமைச்சராக இருக்க சம்மதித்தேன் என்றும் சொன்னதாகத் தெரிகிறது. 2021ல் தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னதால்தான் இணைப்பிற்கு ஒப்புக்கொண்டேன் என ஓ.பி.எஸ். சொன்னதாகவும் கூறப்படுகிறது. அப்போது 2021ல் உங்களை முதலமைச்சராக்குவோம் என நாங்கள் கூறவில்லை என அமைச்சர் தங்கமணி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, என்னையும், உங்களைவும் முதல்வராக்கியது சசிகலாதான் என எடப்பாடி பழனிசாமி சொன்னதாகவும், அப்போது என்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா, உங்களை முதல்வராக்கியது சசிகலா என ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக கூறியதாகவும் தெரிகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, தனது ஆட்சியை சிறப்பான ஆட்சி என்று பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார் என்றும், கொரோனா, குடிமராமத்து பணி போன்றவற்றில் நான் சிறப்பாக செயல்படவில்லையா என கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.மேலும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என அவர் கூறியதாகவும், ஆனால், 11 பேர் கொண்ட குழு அமைத்து முடிவு எடுக்கலாம் என ஓபிஎஸ் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, தொண்டர்கள் விரும்பவில்லை என்றால் முதலமைச்சர் பதவியை தூக்கி எறியத் தயார் என ஈபிஎஸ் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இரண்டு பேரும் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், இருவர் மட்டுமே கட்சி இல்லை என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, வரும் ஏழாம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களே இறுதி முடிவு எடுக்க உள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா ஆகியோர் கூறியுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வரும் 7-ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவதை கட்சியின் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading