தமிழக மீனவர்களின் உரிமையை, மத்திய அரசு பாதுகாக்கும்: பிரதமர் மோடி வாக்குறுதி

தமிழக மீனவர்களின் உரிமையை, மத்திய அரசு பாதுகாக்கும்: பிரதமர் மோடி வாக்குறுதி

நரேந்திர மோடி

விழா முடிவில் பிரதமர்,முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை கோர்த்து உயர்த்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 • Share this:
  தமிழகத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமரின் வருகையையொட்டி விமான நிலைய வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்ட பிரதமர், நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளத்திற்கு சென்றார். அங்கு பிரதமருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.

  அடையாறு ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்திலிருந்து, நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி சாலை வழியாக காரில் புறப்பட்டார். அவருக்கு சாலையின் இருமருங்கிலும் கூடியிருந்த ஏராளமானோர் கரவொலி எழுப்பி வரவேற்பளித்தனர். பேண்ட் வாத்தியங்கள் முழங்க கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் என கலைஞர்களின் சிறப்பு வரவேற்பும் பிரதமருக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு 5 இடங்களில் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பளிக்கப்பட்டது. தொண்டர்கள் ஏராளமானோர் அதிமுக மற்றும் பாஜக கொடிகளுடன் பிரதமரை வாழ்த்தி வரவேற்றனர். பொதுமக்களை பார்த்து கையசைத்து அவர்களது வரவேற்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

  முதல்வருடன் பிரதமர்


  டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிறப்பு காரில் பயணித்த பிரதமர் மோடி, மக்களை நோக்கி கை அசைத்தபடி சென்றார். நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு வந்த அவர், ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1 ஏ டாங்கியை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

  இதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு பார்வையாளர்கள் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு விழா மேடையில் பிரதமர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி கிருஷ்ணர் சிலையையும், துணை முதலமைச்சர் தட்சணாமூர்த்தி சிலையையும் பிரதமருக்கு நினைவுப்பரிசாக வழங்கினர். இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

  வரவேற்புரை நிகழ்த்தி பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழகம் வந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களை அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரதமர் மோடி, பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் என்றும் புகழாரம் சூட்டினார்.

  இதனைத் தொடர்ந்து 3,770 கோடி ரூபாய் மதிப்பிலான வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடற்கரை- அத்திப்பட்டு இடையிலான 4வது ரயில் பாதை சேவையை தொடங்கி வைத்த பிரதமர், 423 கோடி ரூபாய் மதிப்பிலான விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை இடையிலான 228 கிலோமீட்டர் தொலைவிலான மின்மயமாக்கப்பட்ட ஒருவழி ரயில் பாதை திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 2,640 கோடி மதிப்பிலான கல்லணை கால்வாய் மறு சீரமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

  துணை முதல்வருடன் பிரதமர்


  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு' என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். சென்னைக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அன்பான வரவேற்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். சென்னை அறிவுசார் மற்றும் படைப்புத்திறன் கொண்ட நகரம் என்று பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து அவ்வையாரை மேற்கொள் காட்டி பேசிய பிரதமர் மோடி, நீர்மேலாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

  சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு ஒரே கட்டமாக வேறு எந்த நகருக்கும் நிதி ஒதுக்கவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், புதிய ரயில் பாதைகளால் பயணிகள் உரியநேரத்திற்கு சென்றடைய முடியும் எனக் கூறினார். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி நவீன ஆயுதங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1 ஏ டாங்கியை ராணுவத்திற்கு அர்ப்பணித்ததை பெருமையாகக் கருதுவதாக கூறிய பிரதமர் விரைவில் தமிழகம் டாங்கி உற்பத்தி மையமாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் உருவாகும் டாங்கிகள் எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறினார்.

  7 உட்பிரிவுகளை சேர்ந்த பட்டியலினத்தவரை தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்படும் என கூறிய பிரதமர் தேவேந்திர குல வேளாளர் அறிவிப்புக்கு உதவியாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கருணை மற்றும் விடாமுயற்சியின் சின்னமாக இந்திய மீனவர்கள் திகழ்வதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பட்டார்.

  தனது பெயரில் உள்ள நரேந்திர என்பதுடன் தேவேந்திர என்ற பெயர் ஒத்திசைந்திருப்பதாகவும் கூறினார்.  இலங்கைத் தமிழர் நலனில் மத்திய அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது எனக் கூறிய பிரதமர் , யாழ்பாணத்திற்கு சென்ற ஒரே பிரதமர் தான் என குறிப்பிட்டார். மேலும் விரைவில் திறக்கப்பட உள்ள யாழ்ப்பாண கலாசார மையத்தை இந்தியா சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதை எண்ணி பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

  தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை ஒருபோதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது எனக் குறிப்பிட்ட பிரதமர், தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பாதுகாக்கும் எனக் கூறினார். இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இப்போது இல்லை என்றும் இருந்த 300 படகுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள படகுகளும் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிபடக் கூறினார்.

  விழா முடிவில் பிரதமர்,முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை கோர்த்து உயர்த்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்பின்னர், பிரதமர் மோடியுடன் முதலமைச்சர எடப்பாடி பழனிசாமி 10நிமிடம் ஆலோசனை நடத்தினார். பிரதமர் உடனான முதல்வரின் ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆலோசனைக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் கொச்சி விமானப்படை தளத்திற்கு பிரதமர் புறப்பட்டார்.

  நிகழ்ச்சியில் அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். பாமக தலைவர் ஜி.கே. மணி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு சென்னை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தபடியே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து போட்டியை பார்த்தபடி கடந்து சென்றுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், "வானத்தில் இருந்தபடியே சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான சுவாரசியமான டெஸ்ட் போட்டியை கண்டேன்" என பதிவிட்டுள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: