தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நியூட்ரினோ திட்டம் நிறுத்தப்படும் : தங்க தமிழ்செல்வன் உறுதி

தங்க தமிழ்ச் செல்வன்

எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழல் அரசு, இந்த அரசை அகற்றும் வரை பிரச்சாரம் செய்வேன் என்று சொன்னார் பன்னீர்செல்வம். 

  • Share this:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். அவரை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றிருந்தாலும் இந்த முறை ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து போடிநாயக்கனூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் அவர் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்..

கேள்வி: முதல்முறையாக போடிநாயக்கனூர் தொகுதியில் களம் காண்கிறீர்கள். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களின் அன்பால் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும்.

கேள்வி:நீங்கள் ஏற்கனவே வென்றிருந்த ஆண்டிபட்டி தொகுதியில் நின்றிருந்தால் வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும் அல்லவா.. ஏன் போடி தொகுதியில் நிற்கிறீர்கள்?

ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்றிருந்தால் வென்று இருப்பேன் தான். ஆனால், போடியில் நிற்பதன் மூலம் எனக்கு இன்னும் கூடுதல் வாக்குகள் அளித்து மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்.

கேள்வி: அ.தி.மு.கவில் இருந்த போது உங்களுடன் ஒன்றாக பணியாற்றிய இருவர் அ.தி.மு.க, அ.ம.மு.க சார்பில் உங்களுக்கு எதிரெதிராக போட்டியிடுகிறார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

நான் அரசியலில் யாரிடமும் நடித்து, கூனி, குறுகி பதவி பெற்றதில்லை. என்னுடைய உழைப்பால் தான் அரசியலில் வளர்ந்து வந்துள்ளேன். ஆனால், ஓ பன்னீர்செல்வம் நடித்து பதவி பெற்றவர். டி.டி.வி.தினகரன், சசிகலா, ஜெயலலிதாவிடம் நடித்து முதலமைச்சர் பதவி பெற்றார். ஜெயலலிதா இறந்த பிறகு சமாதியில் போய் தர்ம யுத்தம் நடத்தினார். எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழல் அரசு., இந்த அரசை அகற்றும் வரை பிரச்சாரம் செய்வேன் என்று சொன்னார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லிவிட்டு, பா.ஜ.க சொன்னதால் மீண்டும் அ.தி.மு.கவுடன் இணைந்து துணை முதலமைச்சர் பதவியையும், மகனுக்கு எம்.பி பதவியையும் பெற்றுக் கொண்டார். ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இதுவரை சாட்சி சொல்லவில்லை.  இதனால், பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டார் என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிக்காமல் உள்ள எனக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள்.

கேள்வி: ஜெயலலிதா மரணத்திற்கு தி.மு.க-வினர் அளித்த மன அழுத்தம் தான் காரணம் என அ.தி.மு.க-வினர் கூறுகிறார்களே...?

இது என்ன முட்டாள்தனமான வாதமாக உள்ளது. ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடுத்து, அவர் தண்டனை பெற்று சிறை சென்றார் என்பது உண்மை தான். அந்த சொத்து பணம் முழுவதும் எங்கே? இதை ஏன் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கண்டுபிடிக்கவில்லை. ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு வீட்டில் ஏன் கொலை நடந்தது? இந்த மர்மங்களை எல்லாம் ஸ்டாலின் கண்டுபிடித்து மக்களுக்கு சொல்வார்.

கேள்வி: துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திடம் நேருக்கு நேர் மோதுகிறீர்கள். என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?

அவரை வெல்வதற்கு எந்த வியூகமும் என்னிடம் இல்லை. மக்களிடம் செல்கிறேன். ஓ பன்னீர்செல்வம் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மக்கள் தங்கம், வெள்ளியா கேட்கப் போகிறார்கள்; தண்ணீர், சாலை உள்ளிட்ட வசதிகளை கூட சரி செய்ய முடியாதவராக இருந்துள்ளார் பன்னீர்செல்வம். அவர் மீது மக்கள் கொண்டுள்ள முழு அதிருப்தி என்னை வெற்றிபெற வைக்கும்.

கேள்வி: பல முனை போட்டியால் அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்து தி.மு.க-விற்கு வெற்றி வாய்ப்பு குறையவும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறதே..?

கடந்த தேர்தலில் இருந்த மக்கள் இப்போது இல்லை. அவர்களிடம் நிறைய மாறுதல்கள் உள்ளன. அதிமுக ஆட்சி நடத்திய ஊழல்களை அவர்கள் கண்டுகொண்டுள்ளார்கள். இதில் பலமுனை போட்டி என்ற பேச்சே இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதே உண்மை.

கேள்வி:வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வீர்கள்?

அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தால் மக்களுக்கு பெரும் ஆபத்து உள்ளது. பல நல்ல திட்டங்களை வட மாநிலங்களுக்கு அளிக்கும் மத்திய அரசு, மோசமான நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்திற்கு அளிக்கிறது. இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தது ஓ.பன்னீர்செல்வம். நியூட்ரினோ திட்டம் வராது என வாக்குறுதி தந்தார் பன்னீர்செல்வம். ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தன்னுடைய பதவிக்காக எதையும் இழக்க தயாராக உள்ளார் பன்னீர்செல்வம். மக்கள் நலனை பற்றி அவர் சிந்திக்கவில்லை என்பதற்கு நியூட்ரினோ திட்டமே சாட்சி. திமுக ஆட்சிக்கு வந்ததும் நியூட்ரினோ திட்டம் நிறுத்தப்படும். கொட்டகுடி ஆற்றின் மேலே அணை கட்ட நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் குடிநீர் சிக்கல் தீரும் என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: