அசாம் தேர்தல்: 92 தொகுதிகளில் பாஜக போட்டி: அசாமில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா?

அசாம் தேர்தல்: 92 தொகுதிகளில் பாஜக போட்டி: அசாமில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா?

அசாம் தேர்தல்:

2016-ல் 84 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 60 இடங்களில் வெற்றிபெற்றது. இது 2011 தேர்தலை காட்டிலும் 55 இடங்கள் கூடுதலாகும்.

  • Share this:
மார்ச் 27ம் தேதி முதல் கட்ட தேர்தலை சந்திக்க இருக்கும் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி முதல் ஆளாக தொகுதி பங்கீட்டினை நிறைவு செய்திருக்கிறது. கடந்த முறை 84 தொகுதியில் போட்டியிட்ட பாஜக இம்முறை 92 இடங்களில் போட்டியிட இருப்பதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலாக இருப்பது அசாம் மட்டுமே. எனவே மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மும்முரமாக களப்பணி ஆற்றி வருகிறது பாஜக. இதனிடையே கூட்டணி தொகுதிப் பங்கீட்டினை இழுபறி இன்றி சுமூகமாக நடத்தி முடித்துள்ளது அக்கட்சி. அசோம் கன பரிஷத், ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு 84 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் இருதி செய்துள்ளது.

126 தொகுதிகளை உள்ளடக்கிய வடகிழக்கு மாநிலமான அசாமில் பாஜக 92 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன் கூட்டணியில் உள்ள அசோம் கன பரிஷத் (AGP) கட்சிக்கு 26 இடங்களும், ஐக்கிய மக்கள் லிபரல் கட்சிக்கு (UPPL) 8 இடங்களும் ஒதுக்கப்பட்டிருப்பதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும் சிறிய கட்சி ஒன்று பாஜகவில் இணைந்திருப்பதாகவும் அக்கட்சியைச் சேர்ந்த இருவர் பாஜக சின்னத்தில் போட்டியிடுவதாகவும் உடன்படிக்கை எட்டப்பட்டிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல 84 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இன்று தொகுதிவாரியான அப்பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ல் 84 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 60 இடங்களில் வெற்றிபெற்றது. இது 2011 தேர்தலை காட்டிலும் 55 இடங்கள் கூடுதலாகும்.

அசாமில் இரண்டு முறையாக முதல்வர் பதவியும், 6 முறை எம்.எல்.ஏவாகவும் பதவி வகித்த அசோம் கன பரிஷத் கட்சியின் நிறுவனருமான பிரஃபுல்லா குமார் மஹந்தாவுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது உடல்நலக் குறைவு காரணமாக அவர் டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின் மீதான பார்வை காரணமாக தற்போதைய தலைமை மீது ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் கட்சியிலிருந்து ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மஹந்தாவிற்கு சீட் ஒதுக்கப்படாமல் போகுமானால் அவரின் ஆதரவாளர்கள் கட்சியை இரண்டாக பிளவு படுத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது..

2016 தேர்தலில் 24 தொகுதிகளில் போட்டியில் அசோம் கன பரிஷத் கட்சி அதில் 14-ல் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் UPPL கட்சி போட்டியிட்ட 4 இடங்களில் ஒரு சீட்டில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.

முந்தைய தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் இருந்து தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு தாவியிருக்கும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி (BPF) போட்டியிட்ட 16 இடங்களில் 12ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: