நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தைப் பாஜக விழுங்கிவிடும்: தேஜஸ்வியை முதல்வராக்க நிதிஷ் முன்வர வேண்டும் என ஆர்ஜேடி பரிந்துரை

நிதிஷ் குமார்.

ஆர்ஜேடி பகல் கனவு காண்கிறது. முதலில் காங்கிரஸுடனான உறவை ஆர்ஜேடி சுமுகமாக பார்த்துக் கொள்ளட்டும் என்று பீகார் பாஜக தெரிவித்துள்ளது.

 • Share this:
  பாஜக, ஐக்கிய ஜனதாதளக் கூட்டணியில் சில தர்ம சங்கடங்கள் ஏற்பட்டுள்ளதால் தேஜஸ்வியை முதல்வராக்கி விட்டு நிதிஷ் குமார் தேசிய அரசியலில் கவனம் செலுத்தட்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் அறிவுரை வழங்கியுள்ளது.

  அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்களில் 6 பேர்சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். இது பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் நடவடிக்கைக்கு ஐஜத எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும் பிஹார் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த யாரையாவது தேர்வு செய்யட்டும் என்றும் நிதிஷ் குமார் கூறி இருந்தார்.

  இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் உதய்நாராயண் சவுத்ரி நேற்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
  “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக பெரிய மீனாகஇருந்துகொண்டு மற்ற கட்சிகளான சிறிய மீன்களை விழுங்கி வருகிறது. இதனால்தான் சிவசேனா, அகாலிதளம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறின. இப்போது ஐஜதவையும் பாஜக விழுங்கப் பார்க்கிறது. பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு, தேஜஸ்வி யாதவை முதல்வராக்க நிதிஷ் குமார் முன்வர வேண்டும். அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவரை பிரதமர் வேட்பாளராக நாங்கள் முன்னிறுத்துவோம்”, என்றார்.

  ஆனால் பாஜக இதற்குப் பதிலடி கொடுத்துக் கூறுகையில், “ஆர்ஜேடி பகல் கனவு காண்கிறது. முதலில் காங்கிரஸுடனான உறவை ஆர்ஜேடி சுமுகமாக பார்த்துக் கொள்ளட்டும். உதய் நாராயண் சவுத்ரி ஆர்ஜேடி கட்சியில் முக்கியத்துவம் இழந்துவிட்டார். தேஜஸ்வி யாதவின் கவனத்தை ஈர்க்க இதுபோன்று பேசுகிறார்” என்று பீகார் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: