Home /News /politics /

அமித் ஷா பொதுக்கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க வேட்பாளர்கள் - நெல்லை களநிலவரம்

அமித் ஷா பொதுக்கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க வேட்பாளர்கள் - நெல்லை களநிலவரம்

அமித் ஷா

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சார பொதுக் கூட்டத்தை புறக்கணித்த நெல்லை மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் பா.ஜ.க பிரச்சாரத்தால் கிடைக்கும் வாக்குகள் குறைகிறதா.

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குடும்ப கட்சியான தி.மு.க-வுக்கு முடிவு கட்டி எம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவர வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் ஆனால் குடும்ப வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி தி.மு.க-வும், காங்கிரசும். மக்களுக்கான ஆட்சி வேண்டுமா குடும்ப கட்சி ஆட்சி வேண்டுமா என மக்கள் முடிவு செய்ய வேண்டும்  என நெல்லையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்

நெல்லை மாவட்டம் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தச்சை கணேசராஜாவை ஆதரித்து நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பில் தச்சநல்லூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

விழா மேடையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டது. ஆனால் திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளரும் நாங்குநேரி தொகுதி வேட்பாளருமான கணேசராஜா ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்றனர். ராதாபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்தை புறக்கணித்தனர்.

இதனிடையே பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது, ‘ கோயில் நகரமாகிய திருநெல்வேலிக்கு வந்திருப்பதால் நான் பெருமை அடைகிறேன். இந்த பூமி தர்ம பூமி மோட்ச பூமி. வீரபான்டிய கட்ட பொம்மன் பற்றி செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறேன். தமிழக சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவுக்கு கொண்டு வந்து எம்ஜிஆரின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். மோடி தலைமையிலான தேசிய ஜனயாக கூட்டணி அதேசமயம் ராகுல் பப்பு தலைமையில் முற்போக்கு கூட்டணி இடையே தான் போட்டி. மோடி சாதாரணமாக டீ விற்று உலகமே பாராட்டும் பிரதமராக உயர்ந்துள்ளார் அதேபோல் சாதாரண ஏழை விவசாயி மகனாக பிறத்து தனது உழைப்பால் முதல்வராக ஆனவர் எடப்பாடி பழனிச்சாமி.

தி.மு.க-வும் காங்கிரசும் 4ஜி போன்று நான்கு தலைமுறைகளாக இந்த தேசத்தில் ஆட்சி செய்து வருகிறார்கள். மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் நடைபெறும் யுத்தம் தான் இந்த தேர்தல். இன்னொரு குடும்பம் உள்ளது தமிழகத்தில், கருணாநிதி, ஸ்டாலின் உதயநிதி 3 ஜி குடும்பம். உதயநிதியை முதல்வராக்க முயற்சி செய்யும் கட்சி தி.மு.க. அது குடும்ப கட்சி, பணக்கார கட்சி, ஆனால் பா.ஜ.க ஏழைகளை மையமாக வைத்து வளர்ந்துள்ளது.

பிரதமருக்கு மீனவர்கள் விவசாயிகள் ஏழைகள் பற்றி கவலை. ஆனால் ஸ்டாலினுக்கு தனது மகனை பற்றி மட்டும் தான் கவலை மகனை முதல்வராக்க வேண்டும் என்ற கவலை. ஸ்டாலினிடம் கோபமும் ஊழலும் வளர்ந்து வருகிறது. எப்போதும் பேப்பர் பார்த்து தான் பேசுகிறார். தமிழகத்தின் பெருமை, இறந்தவர்களை விமர்சிப்பது கிடையாது ஆனால் தி.மு.க-வில்  இறந்த பெண்மணியான முதல்வரின் தாயாரை கேவலமாக பேசும் அளவுக்கு அந்த கட்சி உள்ளது. எனவே வரும் தேர்தலில் பெண்கள் ஒரு ஓட்டு கூட தி.மு.க-வுக்கு போடாமல் நீங்கள் தாமரையை வெற்றி பெற செய்ய வேண்டும்.

நாட்டின் பிரதமரும் தமிழக முதல்வரும் சாதாரண மக்களை பற்றி கவலைப்படக் கூடியவர்கள். விவசாயிகள் கடனை ரத்து செய்து தமிழக முதல்வர் சாமானிய மக்களின் ஆட்சியை செய்து வருகிறார். நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியில் தலித் சமூகத்தவரை வைத்து அழகு பார்க்கும் கட்சி பா.ஜ.க. நான் நரேந்திரன், நீஙகள் தேவேந்திரன் என பிரதமர் கூறினார். பல்வேறு பிரிவுகளாக இருந்த சமூகத்தினரை ஒரே பிரிவாக தேவேந்திரகுல வேளாளர் என மாற்றினார் பிரதமர்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது தி.மு.க-வும் காங்கிரசும் வெளியேறியது. இருப்பினும் அந்த திட்டத்தை நிறைவேற்றி பெருமை சேர்த்து கொடுத்தவர் மோடி. 10 ஆண்டுகளாக சாதாரண மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தமிழ் மொழி மீது ஈடுபாடு கொண்டவர். உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் தமிழின் பெருமையை பறைசாற்றியவர். மீண்டும் காங்கிரஸ் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு தடை செய்து விடுவார்கள். 2014ல் மோடி பொறுப்பேற்ற பிறகு மீனவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. உலகத்தின் எந்த சக்திகளுக்கு நமது தமிழக மீனவர் மீது தாக்குதல் நடத்த தகுதி இல்லை.

தமிழக முதல்வரும் துணை முதல்வரும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கொரோனோ காலத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மோடி தனது பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ஒதுக்கியுள்ளார் சென்னை மெட்ரோ ரயிலுக்கு 30,000 கோடி ஒதுக்கியுள்ளார். சாகர்மாலா திட்டத்துக்கு 2.15 லட்சம் கோடி ஒதுக்கி 107 மையங்கள் அமைத்த ஆட்சி பா.ஜ.க. ஒட்டுமொத்த தமிழகத்தின் முழு வளர்ச்சிக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க பாடுபடுகிறது. ஆனால் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி காங்கிரசும் தி.மு.க-வும் என்று அமித்ஷா பேசினார்.

பாரதிய ஜனதா தலைவர்கள் பிரச்சாரம் செய்தால் வாக்குவங்கி குறைவதாக அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. கோவையில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி மூன்று சதவீதம் சரிந்து இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி நாட்டில் புதிய துறைமுகம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என பேசியிருந்தார் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய துறைமுகம் சரக்கு பெட்டக துறைமுகம் அமைப்பதற்கு மாவட்ட மக்கள் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதே கூட்டத்தில் 'கலந்துகொண்டு பேசிய அ.தி.மு.க-வின் கன்னியாகுமரி வேட்பாளர் தளவாய்சுந்தரம் துறைமுகம் அமையாது என பிரதமர் உறுதி அளிக்க வேண்டுமென பேசியிருந்தார். ஆனால் துறைமுகம் அமையும் என பிரதமர் பேசி இருப்பதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய மீனவர்கள் நடுநிலை மக்களின் வாக்குகள் கிடைக்காது என அ.தி.மு.க-வினர் கருதுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அமித்ஷா நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் ஜெரால்டு, அம்பாசமுத்திரம் வேட்பாளர் இசக்கி சுப்பையா, ராதாபுரம் வேட்பாளர் இன்பதுரை ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, Ambasamudram Constituency, Amit Shah, BJP, DMK, MKStalin, Nainar Nagendran, Palayamkottai Constituency, Radhapuram Constituency, Tirunelveli Constituency, TN Assembly Election 2021, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி