அசாம் தேர்தல்: பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!

அசாம் தேர்தல்

2016ல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற BPF தற்போது காங்கிரஸ் கூடாரத்தில் உள்ளது.

  • Share this:
அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் இரண்டொரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் திருவிழா முதலில் தொடங்குவது அசாம் மாநிலத்தில் தான். அங்கு 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இந்த மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு பாஜக தலைமையிலான கூட்டணி ஒரு புறம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரு புறம் மற்றும் மாநில கட்சிகள் ஓரணி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் பாஜக தலைமையில் அசோம் கனபரிஷத் (AGP),யுனைடெட் பீப்பிள்ஸ் கட்சி லிபரல் (UPPL) மற்றும் கன சுரக்‌ஷா கட்சி (GSP) ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் களப்பணியாற்றி வருகின்றன. இதனிடையே பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த Hagrama Mohilary தலைமையிலான போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி (BPF) அதிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளது. 2005-ல் அக்கட்சி தொடங்கியதில் இருந்து அக்கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி வாகை சூடியுள்ளது.

இந்நிலையில் பாஜகவில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் உடன்பாடு எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அசாம் முதல்வர் சர்பானந் சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அசாம் பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ், AGP கட்சியின் தலைவரும் மாநில அமைச்சருமான அதுல் போரா, UPPL கட்சித் தலைவர் பிரமோத் போரோ, மாநில அமைச்சரும், பாஜக தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

126 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அசாமில் 2016ம் ஆண்டு 14 தொகுதிகளில் வெற்றி பெற்ற AGP கட்சிக்கு இம்முறை 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனவும், இக்கூட்டணிக்கு புதிய வரவாக வந்துள்ள UPPL கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது. இக்கட்சிக்கு எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை. 2016ல் 60 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இதர தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

2016ல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற BPF தற்போது காங்கிரஸ் கூடாரத்தில் உள்ளது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக அரங்கேறிய பின்னர் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்வது தொடர்பாக பாஜக தலைவர்கள் ஜே.பி.நட்டாவினை அவரது இல்லத்தில் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்திய தேர்தல் கமிட்டி அசாம் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக இன்று கூடி முடிவெடுக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
Published by:Arun
First published: