தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தலைமையிலான இரட்டை எஞ்சின் கொண்ட ஆட்சி நடைபெறும் என அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலுள்ள பாஜகவுக்கு அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் அரவக்குறிச்சியில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய காமராஜர் நகரில் உள்ள தேர்தல் பணிமனையில் இருந்து சைக்கிளில் ஊர்வலமாக வந்தார். கழுத்தில் தாமரைப்பூ மாலை அணிந்திருந்தார். அரவக்குறிச்சி வட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான தவசெல்வனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நல்லாட்சி அமைவது உறுதி. சாதாரண மக்களுக்கான ஆட்சி மீண்டும் தமிழகத்தில் தொடரும். தமிழகத்தில் அ.தி.மு.க - பாஜக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மூன்றில் இரண்டு பங்கு வெற்றி என்பதை விட கூடுதலாகவே வெற்றி பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற தி.மு.க எம்எல்ஏ தொகுதிகளில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தலைமையான இரட்டை எஞ்சின் கொண்ட ஆட்சி நடைபெறும். கமல் வேறு கொள்கை உடையவர், பி டீம், சி டீ என்று பாஜகவில் கிடையாது. கமல்ஹாசன் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக என அனைத்து கட்சியையும் வசைபாடக் கூடியவர்.கரூரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி தோல்வி பயத்தில் பிதற்றுகிறார்” என்றார்.

அண்ணாமலை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
வேட்புமனு தாக்கல் முடிந்தது வெளியில் வந்தவர்கள் உடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சி கடை வீதி பகுதியில் வாகனத்தில் நின்றவாறே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் இருந்த தேநீர்க் கடையில் அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை கரூர் அ.தி.மு.க வேட்பாளரும், போக்குவரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் தேனீர் அருந்தினர்.
செய்தியாளர்: கார்த்திக்கேயன்