ஏழைகளுக்கான குடிசை மாற்று வாரிய வீட்டு ஒதுக்கீடுக்காக ஆட்சியரிடம் கோரிக்கை: வாடகை வீட்டில் வசிக்கும் இரண்டுமுறை எம்.எல்.ஏ

நன்மாறன்

மக்களுக்கு பணி செய்ததற்காக அரசு கொடுத்த சம்பளத்தையும் விதிப்படி கட்சிக்கே கொடுத்தார். பின்னர், அரசு அளிக்கும் 20 ஆயிரம் ரூபாய் எம்.எல்.ஏ ஓய்வூதியத்தையும் கட்சிக்கே கொடுத்து விட்டு, கட்சி அளிக்கும் 12 ஆயிரம் ரூபாய் சொற்ப பணத்தில் வாழ்ந்து வருகிறார்.

 • Share this:
  2001 மற்றும் 2006 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று மதுரை கிழக்கு தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு சென்றார் நன்மாறன். மக்கள் பணியையும், கட்சிப் பணியையும் இரு கண்ணென கொண்ட இவர், மக்களுக்கு பணி செய்ததற்காக அரசு கொடுத்த சம்பளத்தையும் விதிப்படி கட்சிக்கே கொடுத்தார். பின்னர், அரசு அளிக்கும் 20 ஆயிரம் ரூபாய் எம்.எல்.ஏ ஓய்வூதியத்தையும் கட்சிக்கே கொடுத்து விட்டு, கட்சி அளிக்கும் 12 ஆயிரம் ரூபாய் சொற்ப பணத்தில் வாழ்ந்து வருகிறார்.

  மதுரை ஆரப்பாளையம் பொன்னகரம் பகுதியில் ஒரு காம்பவுண்டு மாடி வீட்டில் 6,000 ரூபாய் வாடகைக்கு வசித்து வருகிறார். அவரது இரு மகன்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும், தன் காலத்திற்குப் பிறகு தன் மனைவி வள்ளிக்கு வசிப்பிடம் வேண்டும் என்பதற்காகவும் பிப்ரவரி 15-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவோடு வந்தார். ராஜாக்கூர் பகுதியில் ஏழைகளுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டில் தனக்கும் ஒரு வீடு ஒதுக்கித் தரும்படி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதனால் இப்போது மீண்டும் அவரது நேர்மை பேசுபொருளாக மாறியிருக்கிறது.

  இதுதொடர்பாக நன்மாறம் பேசும்போது, ’மனைவி பெயரில் வீடு ஒதுக்கித் தரும்படி கோரிக்கை வைத்துள்ளேன். திங்கள்கிழமை குறை தீர்க்கும் நாளில் ஆட்சியர் இருப்பார் என நினைத்து வந்தேன். ஆனால், அவர் இல்லை. எனவே டி .ஆர்.ஓவிடம் கொடுத்துள்ளேன். அது ஊடகங்களில் வந்த செய்திகள் மூலமாக தலைமை செயலகம் வரை சென்றிருக்கும் என நம்புகிறேன்" என்றார். காவல் அதிகாரி வேலை கிடைத்தும், சமூகம் குறித்த தனது சிந்தனையால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதாக கூறும் அவர், தான் மட்டும் உத்தமன் இல்லை என்கிறார்.

  ’கட்சியில் எல்லோருக்கும் ஒரே விதி தான். கட்சி கொடுப்பதை மட்டும் பெற்றுக் கொள்வேன். அங்கு என்னைப் போல பல உத்தமர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சில விதி விலக்குகள் உண்டு. அதையே விதியாக மாற்றிக் கொள்ளக் கூடாது. விதிப்படி தான் நடக்க வேண்டும்’ என தெரிவித்தார். தற்போது 72 வயதிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சிறுபான்மை மக்கள் நல குழுவில் மாநில பொறுப்புகளில் அயராமல் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம், இத்தனை ஆண்டு கால அரசியல், மக்கள் பணியில் நீங்கள் பெற்றது என்ன என்று கேட்டோம்.

  அதற்கு பதிலளித்த அவர், ’சமூகத்துக்கு பயன்பட்டுள்ளேன். அது போதும். பதிலுக்கு, சமூகம் எனக்கு பயன்பட வேண்டும் என நான் நினைத்ததில்லை. இப்போது நாடு சிரமமான நிலையில் இருக்கிறது. அதற்காக பணியாற்ற வேண்டும் என நினைக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

  சமூகத்திற்கு பயன்பட்டது போதும் என்ற திருப்தியில் வாழும் நன்மாறன். அவருக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அவரது மனைவிக்கு பயன்படுவதற்காக ஒரு சிறு கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்திருக்கிறார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: