தமிழகத்தில் போட்டி; தி.மு.க கூட்டணிக்கு வரும் வாக்குகளைப் பிரிப்பாரா ஓவைசி?

அசாதுதீன் ஓவைசி

ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

 • Share this:
  ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் சுருக்கமாக ஏஐஎம்ஐஎம் கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஒவைசியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  ஏஐஎம்ஐஎம், அசாதுதீன் ஓவைசி இந்தப் பெயரே இப்பத்தான் நாங்கள் கேட்கிறோம். அவரது கட்சியால் தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது என அவரைப் பற்றி அறியாதவர்கள் ஆச்சர்யமாக கேட்கலாம். தமிழகத்தை பொறுத்தவரையில் இரண்டு திராவிட கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஓவைசியால் என்ன நடக்கப்போகிறது என்கிறீர்களா?.

  அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் அடிப்படையில் இஸ்லாமியக் கட்சி. இஸ்லாமிய மக்களுக்கு குரல் கொடுப்பவராக அவர் இருந்து வருகிறார். ஐதராபாத் மக்களவை தொகுதியின் எம்.பி-யாக இவர் இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைவிடவும் பா.ஜ.கவை வெளுத்து வாங்குவது ஓவைசிதான். பா.ஜ.க கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் பா.ஜ.கவினர், அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியென்றால் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணிக்கு ஓவைசி ஆதரவு தரப்போகிறார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் ஓவைசி இணைந்தால் தி.மு.க-வுக்கு சாதகமான முடிவு கிடைக்கப்போகிறது என நீங்கள் நினைத்தால் அங்குதான் ஓவைசி ட்விஸ்ட் அடிக்கிறார்.

  ஓவைசி பா.ஜ.கவுக்கு எதிராக பேசிவந்தாலும் அவரை பல அரசியல் கட்சிகள் பா.ஜ.க-வின் Bடீமாகவே பார்க்கிறார்கள். அடிப்படையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஒரு இஸ்லாமிய கட்சி என்பதால் இவர்கள் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணிக்குள் வராமல் தனித்து போட்டியிட்டு சிறுபாண்மையின மக்களின் வாக்குகளை சிதறடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பல்வேறு கட்சிகள் முன்வைக்கின்றன. எதிர்முகாமுக்கு செல்லாமல் தனித்து நின்று பா.ஜ.கவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுகிறார் என்பதே இவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.

  இதனை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்து உள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலே இதற்கு சிறந்த உதாரணம். பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் ஓவைசியின் வருகையால் இவர்களின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. 5 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றிய ஓவைசியின் கட்சி பல்வேறு இடங்களில் வாக்குகளை கணிசமாக பிரித்துள்ளது.

  ‘எங்களை யாரும் கூட்டணிக்கு அழைப்பதில்லை. அதனால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்” என்ற பதிலே ஓவைசியிடம் இருந்து கிடைக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் காணப்படும் தொகுதிகளை ஓவைசியின் கட்சி குறிவைத்திருப்பதாக பேசப்படுகிறது. தமிழகத்தில் அவர்கள் 15 முதல் 20 தொகுதிகளில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ஓவைசியின் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. ஓவைசி விரைவில் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: