நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் - அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

Youtube Video

நீட் தேர்வை கைவிட வேண்டும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

 • Share this:
  பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழுவில் கூட்டத்தில் பங்கேற்க 293 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களை தவிர மற்றவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அரங்கத்திற்குள் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. உள்ளே வருபவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டது. காலை முதலே தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கூட தொடங்கியதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  வந்திருந்த தொண்டர்கள் இ.பி.எஸ்., ஓபிஎஸ் உருவங்கள் அடங்கிய மாஸ்க்களை அணிந்து கொண்டு வந்திருந்தனர். கூட்டத்திற்கு வருபவர்களை வரவேற்க பிரமாண்ட தோரணங்கள், செண்டை மேளம் என தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  பின்னர் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கிய அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  அதன்படி, கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதல்வர், துணை முதல்வருக்கும், அரசு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,

  மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  நீட் தேர்வு முறையை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ள அதிமுக செயற்குழு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது. நீட் விவகாரத்தில் திமுக சுயலாபத்திற்காக நாடகமாடுவதாகக் கூறி செயற்குழுவில் கண்டனம் தெரிவித்துள்ளது.

  இந்திய கலாசார, பண்பாட்டு மறு ஆய்வுக் குழுவில் தமிழக அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தியும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கும் என்றும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க குழு அமைத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைத்ததற்கு பாராட்டு தெரிவித்த அதிமுக செயற்குழு கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தவும் கோரிக்கை வைத்தது.

  கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட 6 புதிய மாவட்டங்கள் அமைத்ததற்கும்,  வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியமைக்கும் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  Published by:Yuvaraj V
  First published: