எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடும் ரஜினி, கமல், பாஜக: எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக

எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடும் ரஜினி, கமல், பாஜக: எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக

நடிகர் ரஜினிகாந்த், பாஜக வரிசையில் தற்போது கமல்ஹாசனும் அரசியல் மேடைகளில் எம்ஜிஆரை துணைக்கு அழைத்துள்ளார். கமலின் பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  தமிழக அரசியல் மேடைகளில் சமீப காலமாகவே அதிமுக அல்லாத கட்சிகளும் எம்ஜிஆரை முன்வைத்தும், அவரது ஆட்சியை பாராட்டியும் பேசி வருகின்றன. இதன் தொடர்சியாக ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்ஜிஆர் கனவான மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிப்போம் எனவும், எம்ஜிஆர் கனவின் நீட்சி நான் என பேசினார்.

  கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்ஜிஆரின் உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், மாணவர்கள் மத்தியில் பேசிய போது, ‘தன்னால் எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை கொடுக்க முடியும்’ என தெரிவித்தார்.

  இதே போல் கடந்த மாதம் பாஜகவின் வேல்யாத்திரை புரோமோ வீடியோவில் எம்ஜிஆரின் உருவாக மோடி சித்தரிக்கப்பட்டதும், அந்த வீடியோவில் பொன்மனச்செம்மலின் வடிவமாய் பிரதமர் மோடி உள்ளதாக கூறப்பட்டதும் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18க்கு காணொலி வாயிலாக பேட்டியளித்த அவர், எம்ஜிஆர் வகுத்த வழியில் அதிமுக சிறப்பாக பயணித்து வருவதாக கூறினார்.

  மேலும் படிக்க...சென்னை நொளம்பூரில் தாய், மகள் உயிரிழந்த விவகாரம்.. கரோலினின் தந்தையை போலீசார் மிரட்டியதாக புகார்

  கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிரியன், எம்ஜிஆரின் நீட்சி நான் என அவர் கூறியிருப்பது மாபெரும் தவறு என தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தான் மட்டுமே எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

  எம்ஜிஆர் தொடங்கிய அஇஅதிமுக இன்னும் உயிர்ப்புடன் உள்ள நிலையில், தேர்தல் மேடையில் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி பிற கட்சிகள் வாக்கு சேகரிப்பது நாகரீகமல்ல என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Vaijayanthi S
  First published: