20 விழுக்காடு கேட்டார், எப்படி 10.5 சதவீதத்துக்கு ஒப்புக் கொண்டார்? மீதி பேருக்கு இட ஒதுக்கீடு வேண்டாமா? - ராமதாஸ் மீது திருமாவளவன் சாடல்

20 விழுக்காடு கேட்டார், எப்படி 10.5 சதவீதத்துக்கு ஒப்புக் கொண்டார்? மீதி பேருக்கு இட ஒதுக்கீடு வேண்டாமா? - ராமதாஸ் மீது திருமாவளவன் சாடல்

திருமாவளவன்

கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் கூட அறிவிப்புகளாகவே இருக்கிறது. எனவே அனைத்தும் தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டியிருக்கிறது.

  • Share this:
தமிழக அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பு மற்றும் கடன் தள்ளுபடி அறிவிப்பு உள்ளிட்ட அனைத்துமே தேர்தல் நாடகங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

திருமாவளவன் மேலும் கூறும்போது, “20 விழுக்காடு கேட்டவர் எப்படி 10.5 சதவீதத்துக்கு ஒப்புக் கொண்டார்? அப்படியென்றால் மிச்சமுள்ள ஒன்பதரை சதவீதம் பேருக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாரா ராமதாஸ்.

இது எந்த அடிப்படையிலே ஒப்புக் கொள்ளப்பட்டது? இந்தக் கேள்வி எழுகிறது. தேர்தலுக்காகச் செய்யப்பட்ட ஒன்றாகத்தான் இது தெரிகிறது. தேர்தல் நாடகமாகத்தான் இது தெரிகிறது.

கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் கூட அறிவிப்புகளாகவே இருக்கிறது. எனவே அனைத்தும் தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டியிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதார பூர்வமாக நம்மால் அறிய முடியும்.

அந்த அடிப்படையில் வேண்டுமானால் உள் ஒதுக்கீடுகளை வழங்கினால் சமூக நீதி அடிப்படையில் செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும்” என்றார் திருமாவளவன்.

முன்னதாக மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை கேள்விக்குள்ளாக்கிய திருமாவளவன், “தமிழகத்தைவிட கூடுதலாக 60 தொகுதிகள் மட்டுமே கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு குறிப்பாக பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது” என்று சாடினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி வெளியேறிய நிலையில், அதிமுக, பாமக இடையே நேற்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாமக தலைவர் ஜி.கே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது, பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published: